search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏற்காட்டில் கடும் குளிரால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தது
    X

    ஏற்காட்டில் கடும் குளிரால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தது

    ஏற்காட்டில் செடி கொடிகள் கூட தெரியாத அளவுக்கு அதிக அளவில் பனி பொழிந்து வருகிறது. காலை 11 மணி வரை அங்கு கடுங்குளிர் வாட்டி வதைப்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் குறைந்துள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் பெய்யும் பனியால் பொதுமக்கள் கடும் குளிரால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் வழக்கமாக அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி 3 மாதங்கள் பரவலாக பெய்யும். இதனால் ஆறு, ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டமும் உயர்வதால் விவசாயமும் செழிக்கும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கை கொடுக்கவில்லை. அதனால் வடகிழக்கு பருவ மழையாவது கை கொடுக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் நவம்பர் மாதமும் முடியும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் லேசான மழை மட்டுமே பெய்துள்ளது. சேலம் மாவட்டத்தில் குறைந்த அளவு மழை கூட பெய்யவில்லை.

    இதனால் நீர் நிலைகள் அனைத்தும் வரண்டு காணப்படுவதால் பயிரிடப்பட்டிருந்த விவசாய பயிர்களும் பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன. விவசாயிகள் மழை வருமா? பயிர்களை காப்பாற்ற முடியுமா? என்ற தவிப்பில் உள்ளனர்.

    இதற்கிடையே வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

    இதில் குறிப்பாக சேலம் ஏற்காட்டில் காலை 9 மணி வரை அருகில் நிற்கும் செடி கொடிகள் கூட தெரியாத அளவுக்கு அதிக அளவில் பனி பொழிந்து வருகிறது. காலை 11 மணி வரை அங்கு கடுங்குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் குறைந்துள்ளது.

    இதே போல சேலம் மாநகர பகுதி, வாழப்பாடி, பேளுர், அயோத்தியாப்பட்டினம், பெத்தநாயக்கன் பாளையம், கல்வராயன்மலை உள்பட பல பகுதிகளிலும் காலை 9 மணி வரை இன்று பனிபொழிவு இருந்தது. இதனால் 9 மணி வரை வாகன ஒட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

    சேலம் மாவட்டத்தில் பெய்யும் இந்த வறட்டு பனியால் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
    Next Story
    ×