search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வனவிலங்குகளை போட்டோ எடுத்த 7 பேருக்கு அபராதம்: வனத்துறையினர் நடவடிக்கை
    X

    வனவிலங்குகளை போட்டோ எடுத்த 7 பேருக்கு அபராதம்: வனத்துறையினர் நடவடிக்கை

    நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை போட்டோ எடுத்த 7 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
    ஊட்டி:

    தென் இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தில் வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள்.

    சீசன் காலங்களில் ஊட்டி சிம்ஸ் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, தேயிலை பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டி சிம்ஸ் பூங்காவில் சென்னையில் இருந்து கணவருடன் சுற்றுலா வந்த தாமரை என்ற பெண் வக்கீலை காட்டெருமை முட்டிக்கொன்றது.

    இதையடுத்து தோட்டக்கலை துறை மற்றும் வனத்துறையினர் வன விலங்குகளுக்கு அருகில் செல்ல வேண்டாம். வனவிலங்குகள் தென்பட்டால் பத்திரமான இடங்களுக்கு செல்ல வேண்டும். புகைப்படம் மற்றும் செல்பி எடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

    குறிப்பாக கல்லட்டி மலைப்பாதை, மைசூர் சாலை ஆகிய பகுதிகள் வனத்தையொட்டி உள்ளது. இதனால் யானை, மான், காட்டெருமைகள் சாலைகளில் உலா வருகின்றன.

    எனவே அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் அத்துமீறுகிறார்களா? என வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    இதற்கிடையே வனப்பகுதிக்குள் நுழைந்து வனவிலங்குகளை போட்டோ எடுத்ததாக7 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, புகைப்படம் எடுக்கும்போது கேமிராவில் இருந்து வரும் வெளிச்சம் வனவிலங்குகளை எரிச்சல் அடைய செய்யும். இதனால் மனிதர்களை தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே வன விலங்குகளை புகைப்படம் எடுக்ககூடாது. மீறி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வனவிலங்குகளுக்கு சிவப்பு, வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறங்கள் பிடிக்காது. இந்த நிறங்கள் அவைகளுக்கு அதிக வெளிச்சத்தை தரும். இதனால் அவைகள் மிரண்டு அங்குமிங்கும் ஓடும். அப்போது அவைகள் தாக்குதலில் ஈடுபடுகின்றன என்றனர்.

    இன்று காலை மசினகுடி- தெப்பக்காடு சாலையில் ஒற்றை காட்டுயானை நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன.

    இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×