search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மேட்டூர் அணை நீர்மட்டம் 28 நாளில் 25 அடி குறைந்தது
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 28 நாளில் 25 அடி குறைந்தது

    மேட்டூர் அணைக்கு நேற்று 3738 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் குறைந்து 2278 கன அடியானது. நேற்று 63.65 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 62.59 சரிந்தது. இதனால் கடந்த 28 நாட்களில் நீர்மட்டம் 25 அடி குறைந்துள்ளது.
    மேட்டூர்:

    ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்படும்.

    இந்த ஆண்டு போதுமான நீர் இருப்பு இல்லாததால் 3 மாதம் தாமதமாக செப்டம்பர் மாதம் 20-ந் தேதி 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 87.68 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடிக்கு மேலும் இருந்தது.

    இதற்கிடையே கர்நாடக அரசு காவிரியில் திறந்து விட்ட தண்ணீரை படிப்படியாக குறைத்து முற்றிலும் நிறுத்தியதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் சரிந்தது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 3738 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் குறைந்து 2278 கன அடியானது. நேற்று 63.65 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 62.59 சரிந்தது. இதனால் கடந்த 28 நாட்களில் நீர்மட்டம் 25 அடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் தற்போது ஒரு நாளைக்கு ஒரு அடிக்கு மேல் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மனு, நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு, தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்கள் சார்பில் விளக்கம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

    காவிரி உயர் தொழில் நுட்பக் குழு தமிழகம் மற்றும் கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்த தங்கள் அறிக்கையை தாக்கல் செய்திருப்பதால் அந்த அறிக்கையின் அடிப்படையில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில் மேலும் திறக்க வேண்டுமா? என்பது குறித்த முடிவை சுப்ரீம் கோர்ட்டு இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×