search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரத்தில் வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை: மோட்டர் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்
    X

    விழுப்புரத்தில் வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை: மோட்டர் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்

    விழுப்புரத்தில் இன்று காலை பிரபல ரவுடி வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் இன்று காலை பிரபல ரவுடி வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த கொலை சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் ஜனா என்கிற ஜனார்த்தனன் (வயது 30), பிரபல ரவுடி. இவர் மீது கொலை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. விழுப்புரம் கோர்ட்டில் வழக்குகள் நடந்து வருகின்றன.

    ஆள்கடத்தல் வழக்கு தொடர்பாக இன்று காலை விழுப்புரம் கோர்ட்டில் ஜனார்த்தனன் ஆஜரானார். பின்னர் அவர் அங்கிருந்து புதுவை கருவடிக்குப்பத்தை சேர்ந்த நண்பர் சுரேசுடன் புதுவை புறப்பட்டார். இருவரும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 மர்ம மனிதர்கள் அவர்களை பின் தொடர்ந்து வந்தனர். விழுப்புரம் ரெயில்வே மேம்பாலம் அருகே ஜனார்த்தனன் வந்தபோது மர்ம கும்பல் அவர்கள் மீது சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. அந்த இடம் முழுவதும் புகை மூட்டமானது. மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி ஜனார்த்தனன் கீழே விழுந்தார்.

    அப்போது மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ஜனார்த்தனன் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதை தடுக்க வந்த சுரேசையும் அவர்கள் தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். ஜனார்த்தனன் இறந்துவிட்டதை உறுதிசெய்த மர்மகும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டது.

    இதுகுறித்து விழுப்புரம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயர், இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். படுகாயமடைந்த சுரேசை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஜனார்த்தனனின் உடலும் அங்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    புதுவை-விழுப்புரம் மெயின் ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அருகே பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க விழுப்புரத்தில் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    ஜனார்த்தனனை பழிக்குபழி வாங்கும் விதமாக மர்மகும்பல் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் புதுவை, கடலூர், விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    கடந்த ஆண்டு விழுப்புரம் ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதே ரெயில்வே மேம்பாலம் அருகே இன்று மற்றொரு ரவுடி கொலை செய்யப்பட்டுள்ளதால் பொது மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×