search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயபால்
    X
    ஜெயபால்

    ஒருதலைக்காதலில் திராவக வீச்சில் பலியான வினோதினியின் தந்தை திடீர் மரணம்

    காரைக்காலில் ஒரு தலைக்காதல் விவகாரத்தில் திராவக வீச்சில் உயிரிழந்த வினோதினியின் தந்தை மரணமடைந்தார்.
    காரைக்கால்:

    காரைக்கால் வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது 56). இவரது மகள் வினோதினி. சென்னையில் என்ஜினீராக வேலை பார்த்து வந்தார்.

    காரைக்கால் திருவேட்டக்குடியைச் சேர்ந்த சுரேஷ் ஒருதலையாக வினோதினியை காதலித்தார். அவரது காதலை ஏற்க வினோதினி மறுத்து விட்டார். இதனால் சுரேஷ் மிகவும் ஆத்திரத்தில் இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு காரைக்கால் வந்திருந்த வினோதினி மீண்டும் சென்னை செல்வதற்காக வீட்டிலிருந்து பஸ் நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ் கண் இமைக்கும் நேரத்தில் வினோதினியின் முகத்தில் திராவகத்தை வீசி விட்டு தப்பிச்சென்றார்.

    திராவக வீச்சில் முகம் சிதைந்த வினோதினி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 12-2-2013 அன்று பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திராவகம் வீசிய சுரேஷ் கைது செய்யப்பட்டார். ஆயுள் தண்டனை பெற்ற அவர் சிறையில் உள்ளார்.

    மகள் இறந்த துக்கம் தாங்காமல் வினோதினியின் தாயார் சரஸ்வதி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

    மனைவி-மகள் இருவரையும் பறிகொடுத்த ஜெயபால் மிகவும் மன வேதனையில் இருந்தார். இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஜெயபால் வீட்டில் மயங்கி கிடந்தார். வீட்டுக்கு வந்த ஜெயபாலின் மைத்துனர் சக்திவேல் உடனடியாக ஜெயபாலை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெயபால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×