search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட ஜமுனா
    X
    கொலை செய்யப்பட்ட ஜமுனா

    நெல்லை அருகே தலை துண்டித்து பெண் படுகொலை

    நெல்லை அருகே தலை துண்டித்து பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த அபிஷேகப்பட்டி அருகே உள்ள வெள்ளாளன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ்(வயது 47). இவர் அதே பகுதி துலுக்கர்பட்டி பஞ்சாயத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். முத்துராஜின் மனைவி காஞ்சனா என்ற ஜமுனா(வயது45).

    இவர்களுக்கு மாரியப்பன்(23) என்ற மகனும், தேவி(19), ஆர்த்திகா(17) என்ற மகள்களும் உள்ளனர். மகன் மாரியப்பன் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு கூலிவேலைக்கு சென்று வருகிறார். மகள் தேவி பேட்டை காந்திநகரில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மகள் ஆர்த்திகா டவுண் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    முத்துராஜூக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து உள்ளார். மேலும் முத்துராஜூக்கு மனைவி ஜமுனாவின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் குடிபோதையில் மனைவியை அடித்து உதைத்து வந்திருக்கிறார்.

    நேற்று இரவும் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு வீட்டில் அனைவரும் தூங்கிவிட்டனர்.

    இந்நிலையில் இன்று காலையில் முத்துராஜ் சீக்கிரமாக எழுந்து மது குடித்தார். அப்போது பிளஸ்-2 மாணவியான அவரது மகள் ஆர்த்திகா வீட்டில் படித்துக்கொண்டிருந்தார்.மனைவி ஜமுனா சமையல் வேலையை கவனித்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் முத்துராஜூக்கு மனைவி மீது திடீரென ஆத்திரம் ஏற்பட்டது. அவர் மகள் ஆர்த்திகாவை சிறிது நேரம் வீட்டில் இருந்து வெளியில் செல்லுமாறு கூறியிருக்கிறார்.

    இதையடுத்து மாணவியும் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அந்த நேரத்தில் முத்துராஜ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி ஜமுனாவை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது கழுத்து பகுதியில் பலத்த வெட்டு விழுந்ததால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    அதன் பிறகும் ஆத்திரம் தீராத முத்துராஜ் மனைவி ஜமுனாவின் தலையை துண்டாக வெட்டி எடுத்து தெருவில் நடந்து சென்றார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர்அலறியடித்தபடி ஓடினர். இருந்தபோதிலும் முத்துராஜ் எந்த பதட்டமும் இன்றி மனைவி தலையை ஊருக்கு வெளியே உள்ள கோவில் முன்பு வைத்தார்.

    பின்னர் சீதபற்பநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது மனைவியை வெட்டிக்கொன்று விட்டதாக கூறி போலீசில் சரண் அடைந்தார். ஜமுனா கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது மகன், மகள்கள் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ரத்தவெள்ளத்தில் தலையின்றி கிடந்த ஜமுனாவின் தாய் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த கொலை சம்பவத்தை அறிந்ததும் அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடினர்.

    இதையடுத்து சீதபற்பநல்லூர் போலீசார், முத்துராஜூன் வீட்டிற்கு வந்து ஜமுனாவின் உடல் மற்றும் கோவிலின் முன் வைக்கப்பட்டிருந்த அவரது தலையை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து முத்துராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×