search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விநாயகர் ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்: வாலாஜாவில் தொடர்ந்து பதற்றம் - போலீஸ் குவிப்பு
    X

    விநாயகர் ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்: வாலாஜாவில் தொடர்ந்து பதற்றம் - போலீஸ் குவிப்பு

    விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் வாலாஜாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
    வாலாஜா:

    வாலாஜாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஏராளமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து நேற்று விநாயகர் சிலைகளை அங்குள்ள ஏரியில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து சென்றனர். வாலாஜா அய்யப்பன் கோவிலில் தொடங்கி தேசிய நெடுஞ்சாலை மற்றும் வாலாஜா உள்பட முக்கிய வீதி வழியாக சென்றது.

    வாலாஜா நகர பஜார் மசூதி அருகில் இரவு சுமார் 7 மணியளவில் வந்தது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி பின்னர் தகராறாக மாறியது. அதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதையடுத்து இந்து முன்னணியினர் மோதலுக்கு காரணமானவர்களை கண்டிக்கும் வகையில் வாலாஜா பஸ் நிலையம் காந்திசிலை அருகே சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது பஜார் வீதியில் உள்ள கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தாக்குதல் நடைபெற்ற கடைகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும், இந்த மோதல் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்தில் அதிவிரைவுப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் நீங்கியது. எனினும் அங்கு போக்குவரத்து சீரடையாததால் பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் 2 மணி நேரம் அவதிக்கு உள்ளாகினர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், கலால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரை இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டார். இரவு 9 மணியளவில் போக்குவரத்து சீரடைந்தது.

    முன்னதாக ஊர்வலம் வருகின்ற வழியில் முஸ்லிம்களின் வழிபாட்டு தலமான மசூதி உள்ளதால் அவர்களின் தொழுகைக்கு முன்பு விநாயகர் சிலை ஊர்வலம் அந்த பகுதியை கடந்து செல்ல போலீசார் வலியுறுத்தினர்.

    போலீசாரின் கோரிக்கை ஏற்கப்படாததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உருவாகியது. எனினும் போலீசார் வழிநெடுக பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வாலாஜா நகர எல்லையில் உள்ள ஏரியில் சிலைகள் கரைக்கப்பட்டன.

    தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு வாலாஜா நகர முக்கிய இடங்களில் இன்று போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    வேலூரில் சதுப்பேரியில் விநாயகர் சிலைகள் கரைப்பதாற்காக கலெக்டர் ஆபீஸ் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.

    சைதாப்பேட்டை நகராட்சி பள்ளி அருகே விநாயகர்சிலை ஊர்வலம் வந்தபோது அப்பகுதியில் மறைவான இடத்தில் இருந்து வீசப்பட்ட ஒருசில கல் மற்றும் தண்ணீர் பாக்கெட் விநாயகர் சிலை ஊர்வலத்தில் வந்து விழுந்தது. இதனால் ஊர்வலத்தில் சலசலப்பு ஏற்பட்டது. போலீசார் கூட்டத்தினரை சமாதானம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஆனால், இந்த சம்பவத்தை கண்டித்தும், போலீசார் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக கூறியும் இந்து முன்னணியினர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கல்வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். அதைத்தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    இதே போல் பெரியார் பூங்கா அருகிலும், கொணவட்டத்திலும் போலீசாருக்கும் இந்து முன்னணியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து சதுப்பேரியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
    Next Story
    ×