search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்: 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு
    X

    வேலூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்: 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

    வேலூரில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. வரும் 12-ந் தேதி வரை விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
    வேலூர்:

    விநாயகர் சதுர்த்தி நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வேலூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெற்று 1,810 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

    இதைத் தொடர்ந்து, விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. வரும் 12-ந் தேதி வரை விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

    அதன்படி முதல் நாளான இன்று 1,184 சிலைகள், நாளை (8-ந் தேதி) 218 சிலைகள், 9-ந் தேதி 332 சிலைகள், 10-ந் தேதி 14 சிலைகள், 11-ந் தேதி 32 சிலைகள், 12-ந் தேதி 17 சிலைகள் விஜர்சனம் செய்யப்படுகிறது.

    வேலூர் உட்கோட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் சதுப்பேரி ஏரி மற்றும் மெட்டுக்குளத்திலும், காட்பாடி உட்கோட்டத்தில் வைக்கப்பட்ட சிலைகள் லத்தேரி ஏரி, வி.ஐ.டி. பின்புறத்தில் உள்ள கல்குவாரியில் கரைக்கப்படுகிறது.

    ராணிப்பேட்டை உட்கோட்ட சிலைகள் வாலாஜா ஏரி, அரக்கோணம் உட்கோட்ட சிலைகள் வடமாம்பாக்கம் ஏரி மற்றும் குருவராஜபேட்டை வளையல்கார குளக்கரையிலும், குடியாத்தம் பகுதி சிலைகள் நெல்லூர்பேட்டை ஏரி, பேரணாம்பட்டில் பத்திரப்பள்ளி அணையிலும் கரைக்கப்படுகிறது.

    ஆம்பூர் பகுதி சிலைகள் ஆணை மடுகு அணை, ஓங்கப்பாடி ஆற்றிலும், வாணியம்பாடி பகுதி சிலைகள் பள்ளிப்பட்டு ஏரி, கனகநாச்சியம்மன் கோவில் தடுப்பு அணையிலும், திருப்பத்தூர் பகுதி சிலைகள் காக்கங்கரை ஏரி, இருமாத்தூர் ஆற்றிலும் கரைக்கப்பட உள்ளன.

    விஜர்சனத்தையொட்டி, 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வேலூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்லும் பாதையில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயல் இழக்க செய்யும் நிபுணர்கள் சோதனை செய்தனர்.

    கடந்த ஆண்டு சென்ற பாதையிலேயே விநாயகர் சிலை ஊர்வலம் நடக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கலெக்டர் அலுவலகம் அருகே கோலாகலமாக தொடங்கிய ஊர்வலம் காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை, மண்டி வீதி, லாங்கு பஜார் வழியாக தெற்கு போலீஸ் நிலையம் எதிரே உள்ள அண்ணா கலையரங்கத்தை அடைந்தது.

    இதையடுத்து, அங்கிருந்து மக்கான் சிக்னல், மாங்காய் மண்டி வழியாக சதுப்பேரி ஏரிக்கு சென்று விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டு வருகிறது. சிலைகள் விஜர்சனம் செய்யப்படுவதையொட்டி, சதுப்பேரி ஏரியில் 100 அடி நீளம், 10 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளது.

    மேலும் ஏரியை சுற்றி கம்புகளால் தடுப்புகள், மின் விளக்குகள் அமைத்து பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,570 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 1405 விநாயகர் சிலைகள் இன்று விஜர்சனம் செய்யப்பட்டு வருகின்றன.

    திருவண்ணாமலை தாமரைக்குளம், செங்கம் சிங்காரப்பேட்டை ஏரி, வந்தவாசி சுகநதி மற்றும் பூமா செட்டிக்குளத்தில் விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்படுகிறது.
    Next Story
    ×