search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக-கர்நாடகா எல்லையில் கன்னட அமைப்பினர் போராட்டம்
    X

    தமிழக-கர்நாடகா எல்லையில் கன்னட அமைப்பினர் போராட்டம்

    காவிரி நீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கர்நாடக விவசாயிகளுக்கும், அரசுக்கும் துரோகம் என கூறி கன்னட அமைப்பினர் தமிழக-கர்நாடகா எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    தமிழகத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என, கர்நாடக அரசிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை கண்டித்து கர்நாடகாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கன்னட ஜாக்ருதி வேதிகே என்ற அமைப்பின் சார்பில், ஓசூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் அத்திப்பள்ளி என்ற இடத்தில் போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில், அமைப்பின் மாநில தலைவர் மஞ்சுநாத்தேவா தலைமையில், நெற்றியில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பியும், அவரது உருவப்படத்தை தீயிட்டு எரித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அமைப்பின் தலைவர் மஞ்சுநாத்தேவா, நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, கர்நாடக விவசாயிகளுக்கும், கர்நாடக அரசுக்கும் துரோகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. தற்போது காவிரியை ஒட்டியுள்ள 4 அணைகளிலும் தண்ணீரே இல்லை. பெங்களூரு புறநகர் பகுதிகளிலும் குடிநீருக்கே பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா பரிசீலனை செய்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவிக்க வேண்டும்.

    சம்பா சாகுபடிக்கு, ஆண்டுக்கு 250 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. பருவமழை பொய்த்து விட்டதால் கர்நாடகத்தில், கரும்பு, நெல் ஆகிய சம்பா சாகுபடிகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கர்நாடக அரசு, விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதேபோன்று, தமிழ்நாட்டிலும் சம்பா, குறுவை சாகுபடியை நிறுத்திக்கொள்ளுமாறு தமிழக விவசாயிகளுக்கு, அரசு அறிவுறுத்த வேண்டும்.

    இந்த பிரச்சினை தொடர்பாக, வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கர்நாடகத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், அனைத்து கன்னட அமைப்புகளும், விவசாய சங்கங்களும் கலந்து கொள்கின்றன. அன்றைய தினம், தமிழக பஸ்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களையும் கர்நாடகத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம். இனி வரும் நாட்களிலும், காவிரி நீர் பிரச்சினையில், தமிழக அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால் தமிழக பஸ்களை, கர்நாடகாவில் இயக்க அனுமதிக்க மாட்டோம். மேலும் தமிழ் சேனல்களை ஒளிபரப்பவும் தடை செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே போல் ‘ஜெய் கர்நாடகா’ என்ற அமைப்பின் சார்பிலும், தமிழக எல்லை அருகே, அத்திப்பள்ளி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அமைப்பின் மாவட்ட தலைவர் கேசவ ரெட்டி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், திடீரென தாங்கள் அணிந்திருந்த சட்டைகளை கழற்றி, கண்டன கோ‌ஷம் எழுப்பியவாறு, சாலையின் நடுவே உருண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஓசூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரும், கர்நாடக மாநில போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி பெங்களூரு சாட்டிலைட் பஸ்நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசு பஸ் மீது சிலர் தமிழக அரசுக்கு எதிரான வாசகங்களை எழுதி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையொட்டி ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். பின்னர் அவர், பெங்களூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமீத் சிங், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நாராயண் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
    Next Story
    ×