search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடங்குளம் அருகே மீனவர் கிராமங்களில் வெடிகுண்டு சோதனை: ரகசிய தகவலால் போலீசார் அதிரடி
    X

    கூடங்குளம் அருகே மீனவர் கிராமங்களில் வெடிகுண்டு சோதனை: ரகசிய தகவலால் போலீசார் அதிரடி

    கூடங்குளம் அருகே மீனவர் கிராமங்களில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர். போலீசாரின் இந்த திடீர் வெடிகுண்டு சோதனை மீனவர் கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வள்ளியூர்:

    கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை, கூத்தங்குளி ஆகிய மீனவர் கிராமங்களில் முன்பு மீனவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. அப்போது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதற்காக மீனவ கிராமத்தில் உள்ள வீடுகளிலேயே நாட்டு வெடிகுண்டுகள் தயார் செய்தனர். கடந்த 2012-ம் ஆண்டு கூத்தங்குளி கிராமத்தில் சுனாமி காலனி வீட்டில் வெடிகுண்டு தயாரித்த போது குண்டு வெடித்ததில் 8 பேர் பலியானார்கள். இதையடுத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் வெடிகுண்டு தயாரிப்பு மற்றும் மீனவர்களின் மோதல் கட்டுக்குள் வந்தது.

    இந்நிலையில் கூத்தங்குளி கடற்கரை பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கு வைக்கப்பட்டிருப்பதாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. தகவலையடுத்து மீனவ கிராமங்களில் வெடிகுண்டு சோதனை நடத்த போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் உத்தரவிட்டார். வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையில் கூடங்குளம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் இடிந்தகரை மற்றும் கூத்தங்குளி கிராமங்களுக்கு சென்றனர்.

    அங்கு சுனாமி காலனியில் வீடு வீடாக சென்று வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என சோதனை நடத்தினர். மேலும் கடற்கரையிலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த படகுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் இந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. போலீசாரின் இந்த திடீர் வெடிகுண்டு சோதனை மீனவர் கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×