search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் கஞ்சா பறிமுதல்
    X

    புழல் அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் கஞ்சா பறிமுதல்

    புழல் அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் இருந்து தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    செங்குன்றம்:

    ஆந்திராவில் இருந்து கேரள மாநில பதிவு எண் கொண்ட ஒரு கார் தமிழக எல்லையில் நேற்று இரவு வேகமாக வந்தது. பாடியநல்லூர் சோதனை சாவடியில் இருந்த போலீசார் அந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் அங்கு நிற்காமல் வேகமாக சென்றது.

    இதையடுத்து செங்குன்றம் போலீசாருக்கு சோதனை சாவடியில் இருந்து போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனால் உஷாரான செங்குன்றம் போலீசார் சோத்துப்பாக்கம் சாலையில் வேகமாக வந்த அந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் அவர்கள் மீது மோதுவது போல வந்ததால் போலீசார் விலகி ஓடினர்.

    பின்னர் அந்த காரை போலீசார் துரத்தி சென்றனர். புழல் காவாங்கரை அருகே சென்ற அந்த கார் நிலைதடுமாறி அங்கிருந்து கால்வாயில் மோதி நின்றது. உடனே காரில் இருந்த 2 பேர் அதில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

    அவர்கள் இருட்டு பகுதியில் தப்பி சென்றதால் பிடிபட்ட காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் 5 பண்டல்கள் இருந்தன. அந்த பண்டல்களில் 225 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.25 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் வழக்குப்பதிவு செய்து காரையும், காரில் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தார். கஞ்சா ஆந்திராவில் இருந்து எங்கு கடத்தி செல்லப்பட இருந்தது? இதில் தொடர்புடையவர்கள் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் காரில் இருந்து தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×