search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் இன்று தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயில் மோதி பலி
    X

    சேலத்தில் இன்று தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயில் மோதி பலி

    சேலத்தில் இன்று தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயில் மோதி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் ஜங்சனில் இருந்து விருத்தாச்சலத்திற்கு பயணிகள் ரெயில் தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்று காலை 10 மணிக்கு வழக்கம் போல சேலம் ஜங்சனில் இருந்து விருத்தாச்சலத்திற்கு புறப்பட்டது.

    ரெயில் சேலம் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள பெரியார் மேம்பாலம் அருகே வந்த போது சேலம் மாவட்டம் வீராணத்தை சேர்ந்த வேலாச்சாமி (வயது50)தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ரெயில் அவர் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் அவரின் 2 கால்களும் ரெயில் என்ஜினில் சிக்கி சிதைந்ததால் அவர் கதறினார். இதை பார்த்த ரெயில் டிரைவர் ரெயிலை உடனே நிறுத்தினார். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளும் அந்த பகுதியினரும் சேர்ந்து அவரை மீட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி கிடந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

    இதற்கிடையே அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அவரது உடலை சோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இறந்த வேலாச்சாமி சேலம் செவ்வாய்பேட்டையில் வெள்ளிப்பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்தார். வீராணத்தில் இருந்து பஸ்சில் வந்த அவர் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்து போனார்.

    இது குறித்து ஜங்சன் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சமீப காலமாக ஆத்தூர், தலைவாசல் உள்பட பல பகுதிகளில் இருந்து பஸ்களில் வரும் பயணிகள் பெரியார் மேம்பாலம் அருகே இறங்கி அங்குள்ள தண்டவாளத்தை கடந்து கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கும் செல்கிறார்கள்.

    அப்படி செல்லும் போது தான் இப்படி ரெயில் மோதி உயிர் பலியாகும் நிலை ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்க இதற்கு மாற்று வழி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×