search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் விஷமாத்திரை கொடுத்து மகளை கொன்ற தாய்
    X

    பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் விஷமாத்திரை கொடுத்து மகளை கொன்ற தாய்

    அவினாசியில் பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் சிறுமிக்கு விஷ மாத்திரை கொடுத்து கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி காமராஜர் நகரை சேர்ந்தவர் பூபதி (வயது 30). இவர் மலேசியாவில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி யமுனா தேவி (24). இவர்களுக்கு ஜோஷிகா (7) என்ற மகள் உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் யமுனா, தனது மகள் ஜோஷிகாவுக்கு விஷ மாத்திரையை கொடுத்துள்ளார். பின்னர் தானும் அந்த மாத்திரையை சாப்பிட்டார்.

    இதில் உயிருக்கு போராடிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி ஜோஷிகா பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தாய் யமுனாவை திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் விசாரணையில் உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

    பூபதிக்கு அவினாசியில் வேலை இல்லாமல் சிரமப்பட்டு வந்தார். பின்னர் கடந்த சில மாதங்களுக்கு மலேசியாவுக்கு சென்று தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    மாதம் தோறும் வீட்டு செலவுக்கு மனைவி யமுனாவுக்கு பணம் அனுப்பி வந்தார். யமுனாவும் அப்பகுதியில் மெகந்தி அலங்காரம் செய்து சம்பாதித்து வந்தார்.

    இருப்பினும் குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாமல் யமுனா சிரமப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் மகள் ஜோஷிகாவுக்கு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்புக்கு கட்டணம் கட்ட பணம் இல்லாமல் அவதிப்பட்டுள்ளார்.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த யமுனா, தனது மனதை கல்லாக்கி கொண்டு தனது மகள் ஜோஷிகாவுக்கு விஷ மாத்திரை கொடுத்து கொலை செய்துள்ளார். அதன்பின்னர் அவரும் விஷ மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார் என விசாரணையில் தெரிய வந்தது.

    சிறுமிக்கு விஷ மாத்திரை கொடுத்து கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அவினாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×