search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாராபுரம் அருகே கெட்டு போன பாலை ஊற்ற வந்த டேங்கர் லாரி சிறைபிடிப்பு
    X

    தாராபுரம் அருகே கெட்டு போன பாலை ஊற்ற வந்த டேங்கர் லாரி சிறைபிடிப்பு

    தாராபுரம் அருகே கெட்டு போன பாலை ஊற்ற வந்த டேங்கர் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
    தாராபுரம்:

    ஈரோட்டை சேர்ந்த தனியார் பால் நிறுவனம், பால், தயிர், பன்னீர் ஆகியவை தயார் செய்து வருகிறது.

    இதில் தயாரிக்கும் போது கெட்டுபோன பாலை தனியாக பிரித்து டேங்கர் லாரிகள் மூலம் நள்ளிரவு நேரத்தில் தாராபுரம் பகுதிகளில் உள்ள நிலங்களில் கொட்டி வந்தனர்.

    இதனால் தாராபுரம் பகுதியில் கெட்டு போன பால் மூலம் துர்நாற்றம் ஏற்பட்டது. மேலும் ஈக்கள் தொல்லையும் இருந்து வந்தது. இதனால் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஈரோட்டில் இருந்து தனியார் பால் நிறுவனத்தின் டேங்கர் லாரி தாராபுரம் அருகே உள்ள செட்டிபாளையத்துக்கு வந்தது. பின்னர் அங்குள்ள ஒரு குழி பகுதியில் சுமார் 12 ஆயிரம் லிட்டர் கெட்டு போன பாலை டிரைவர் அறுமுகம், சூப்பிரவைசர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கொட்டி கொண்டிருந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் திரண்டு அங்கு வந்தனர். பின்னர் லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தாராபுரம் போலீசார் விரைந்து வந்தனர்.

    அப்போது போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதற்கிடையே சூப்பிரவைசர் பாலசுப்பிரமணியம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவர் தன்னை பொதுமக்கள் தாக்கியதாக போலீசில் புகார் செய்துள்ளார்.

    இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×