search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கூடலூர் அருகே விவசாய தோட்டத்தில் இறந்து கிடந்த பெண் யானை
    X

    கூடலூர் அருகே விவசாய தோட்டத்தில் இறந்து கிடந்த பெண் யானை

    கூடலூர் அருகே இன்று விவசாய நிலத்தில் இறந்து கிடந்த பெண் யானை குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் கப்பாமடை பீட் வெட்டுக்காடு சரகத்திற்குட்பட்ட பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வடலூர் வனச்சரகர் (பொறுப்பு) போசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவரது தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    இப்பகுதியில் தென்னை, வாழை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. வனப்பகுதியில் உள்ள யானைகள் அடிக்கடி இடம் பெயர்ந்து தோட்டங்களை சேதப்படுத்தி வந்தது. மேலும் யானைகள் தாக்குதலால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் யானை தாக்கி தோட்டக் காவலாளி உயிரிழந்தார்.

    இதனால் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் தங்கள் தோட்டத்தில் மின் வேலி அமைத்திருந்தனர். தோட்டத்திற்குள் புகுந்த யானை மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்துள்ளது. மின்சாரம் கடுமையாக தாக்கியதில் யானையின் தும்பிக்கை மற்றும் நாக்கு உள்ளிட்ட பகுதிகள் கருகி இருந்தது. இது குறித்து மாவட்ட வன அலுவலர் சொர்ணப்பனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் வேலி அமைத்த நபர் யார்? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கூடலூர் கால்நடை மருத்துவர் குணசேகரன் தலைமையில் மருத்துவ அலுவலர்கள் சம்பவ இடத்திலேயே இறந்து போன யானையை பிரேத பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இறந்தது 16 வயது பெண் யானை ஆகும். மேலும் அந்த யானை கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது.

    இது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×