search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கிரானைட் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு மேலும் ஆவணங்கள் தயாரிப்பு
    X

    கிரானைட் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு மேலும் ஆவணங்கள் தயாரிப்பு

    கிரானைட் முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பரிந்துரை செய்திருந்தார். இது தொடர்பாக மேலும் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயத்தை சட்ட கமிஷனராக நியமித்து உத்தரவிட்டது. இந்த விசாரணை கமிஷனின் கீழ் வருவாய்த்துறை, நில அளவைத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து அவர் மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளில் நடந்த ஊழல் குறித்து பொதுமக்கள், அரசு அதிகாரிகள், போலீசார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

    பின்னர் விசாரணை அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், கிரானைட் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பரிந்துரை செய்து இருந்தார்.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் நேற்று மாலையில் மதுரையில் உள்ள அவரது அலுவலத்துக்கு வருகை தந்தார். இதனால் அவரது அலுவலகம் மீண்டும் பரபரப்பாக காணப்பட்டது.

    கிரானைட் முறைகேடு குறித்த வழக்கு விசாரணைக்கு தாக்கல் செய்வதற்காக ஆவணங்களை தயாரிக்க அவர் வந்ததாகவும், அவருடன் வருவாய் கோட்ட அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷிணி மற்றும் அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

    தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு முடிவடைந்த நிலையில், கிரானைட் முறைகேடு வழக்கு சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×