search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபர் அசாம் - விராட் கோலி
    X
    பாபர் அசாம் - விராட் கோலி

    20 ஓவர் உலககோப்பை: இந்தியா-பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை

    பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் முறையாக உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தும் வேட்கையில் உள்ளது.

    துபாய்:

    20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன.

    இதில் 8 நாடுகள் பங்கேற்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதின.

    லீக் முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இலங்கை (6 புள்ளி), நமீபியா (4), ‘பி‘ பிரிவில் இருந்து ஸ்காட்லாந்து (6), வங்காளதேசம் (4) ஆகிய நாடுகள் முதல் 2 இடங்களை பிடித்து “சூப்பர் 12” சுற்றுக்கு தகுதி பெற்றன.

    அயர்லாந்து, நெதர்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறின.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சூப்பர் 12 சுற்று இன்று தொடங்குகிறது. இதில் விளையாடும் 12 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    “குரூப்1”பிரிவில் நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், 2010-ல் கோப்பையை வென்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, இலங்கை (2014 சாம்பியன்), வங்காளதேசம் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

    “குரூப் 2“ பிரிவில் 2007- ல் உலக கோப்பையை வென்ற இந்தியா, பாகிஸ்தான் (2009 சாம்பியன்), நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா (மாலை 3.30), இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் (இரவு 7.30) அணிகள் மோதுகின்றன.

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்த போட்டி நாளை (24-ந் தேதி) துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    இரு அணிகள் மோதும் ஆட்டத்தை காண உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கிறது. ஏனென்றால் ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேரடியாக விளையாட முடியும். கடைசியாக 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் போட்டி உலக கோப்பையில் மோதின.

    கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் மோதுவதால் உச்சகட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.

    உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றது இல்லை. அந்த வரலாறு நாளையும் நீடிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    ஒருநாள் மற்றும் 20 ஓவர் உலக கோப்பையில் இரு அணிகளும் இதுவரை 13 முறை மோதியுள்ளன. இவை அனைத்திலும் இந்தியாவே வெற்றி பெற்று இருந்தது.

    20 ஓவர் உலக கோப்பையில் இரு அணிகளும் மோதிய 5 ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

    2007-ல் லீக் சுற்றில் ‘பவுல்-அவுட்’ முறையிலும், இறுதிப்போட்டியில் 5 ரன் வித்தியாசத்திலும் பாகிஸ்தானை வீழ்த்தியது. 2012, 2014 மற்றும் 2016-ல் லீக் சுற்றில் முறையே 8 விக்கெட், 7 விக்கெட், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

    ரோகித்சர்மாவும், லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்குகிறார்கள். அதைத்தொடர்ந்து கேப்டன் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கி‌ஷன், ரி‌ஷப் பண்ட், ஹர்த்தி பாண்ட்யா உள்ளனர்.

    வேகப்பந்தில் பும்ரா, முகமது ‌ஷமி, ‌ஷர்துல் தாகூர், சுழற்பந்தில் ஜடேஜா, அஸ்வின், வருண் சக்கரவர்த்தி ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். ஆடுகள தன்மையை பொறுத்து வீரர்கள் தேர்வு இருக்கும்.

    பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் முறையாக உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தும் வேட்கையில் உள்ளது. அந்த அணியிலும் சிறந்த பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

    இரு அணிகளுமே வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்துடன் இருப்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    Next Story
    ×