search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேச அணி வீரர்கள்
    X
    வங்காளதேச அணி வீரர்கள்

    20 ஓவர் உலக கோப்பை: வங்காளதேசம் - பப்புவா நியூ கினியா இன்று மோதல்

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி வங்காளதேச அணி 2-வது வெற்றியுடன் சூப்பர் 12 சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

    மஸ்கட்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடைபெற்று வருகிறது.

    முதல் சுற்று ஆட்டத்தில் 8 நாடுகள் பங்கேற்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ‘ஏ’ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளும் இடம் பெற்று உள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்.

    ‘ஏ’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் இலங்கை அணி 70 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. இதன்மூலம் அந்த அணி 2-வது வெற்றியை பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் நமீபியா 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. இந்த பிரிவில் இருந்து சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் 2-வது நாடு அயர்லாந்தா? நமீபியாவா? என்பது நாளை தெரியும். இரு அணிகளும் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று உள்ளன. 2 தோல்வியை தழுவிய நெதர்லாந்து வாய்ப்பை இழந்தது.

    ‘பி’ பிரிவில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஒரு ஆட்டத்தில் வங்காளதேசம்-பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன.

    வங்காளதேச அணி தொடக்க ஆட்டத்தில் 6 ரன்னில் ஸ்காட்லாந்திடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. 2-வது ஆட்டத்தில் ஓமனை 26 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி வங்காளதேச அணி 2-வது வெற்றியுடன் சூப்பர் 12 சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

    ஒருவேளை தோல்வி அடைந்தால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு நுழைவதில் சிக்கல் ஏற்படும். ஏனென்றால் அந்த அணி தற்போது ரன் ரேட்டில் பின்தங்கி இருக்கிறது.

    இதே பிரிவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஓமன்- ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.

    ஸ்காட்லாந்து 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்று உள்ளது. ஓமன் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளி பெற்று உள்ளது. ஸ்காட்லாந்து 3-வது வெற்றியுடன் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

    இன்றைய ஆட்டங்களில் வங்காளதேசம், ஓமன் அணிகள் வெற்றி பெற்றால் 3 நாடுகள் (ஸ்காட்லாந்து, வங்காளதேசம், ஒமன்) 4 புள்ளிகளுடன் சமநிலை பெறும். ரன்ரேட் அடிப்படையில் 2 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். 

    Next Story
    ×