
கடந்த 1994-ம் ஆண்டு செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு நகரில் நடந்த போட்டியில் அவர் முதன்முறையாக சதம் அடித்தார். இதனால் நடுநிலை ஆட்டக்காரராக களமிறங்கிய அவருக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
தொடக்க ஆட்டக்காரராக தனது முதல் 5 போட்டிகளில் 82, 63, 40, 63 மற்றும் 73 ரன்களை சச்சின் எடுத்துள்ளார். அவர் 463 போட்டிகளில் 18 ஆயிரத்து 426 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவதற்கு அணி நிர்வாகத்திடம் கெஞ்சி கேட்க வேண்டியிருந்தது என்று அவர் தெரிவித்து உள்ளார்.
வீடியோ ஒன்றில் இதுபற்றி சச்சின் தனது பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘‘கடந்த 1994-ம் ஆண்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆக்லாந்து நகரில் நடந்த போட்டியில் இந்திய அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினேன்.
அந்த நேரத்தில், விக்கெட்டுகள் விழாமல் இருக்க வேண்டும் என்ற திட்டத்தினையே அனைத்து அணிகளும் செயல்படுத்தி வந்தன. நான் சற்று வேறுபட்ட முயற்சியை மேற்கொண்டேன்.

தோற்று விடுவோம் என அஞ்சி கொண்டு, ரிஸ்க் எடுக்க தயக்கம் கொள்வது கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இதனை எடுத்து கொள்ள வேண்டும் என்று, தனது ரசிகர்களுக்கு சச்சின் அறிவுறுத்தி உள்ளார்.
அவர் அந்த வீடியோவில், ‘‘தொடக்க ஆட்டக்காரராக முதல் போட்டியில் நான் 82 ரன்கள் (49 பந்துகள்) எடுத்தேன். இதனால் எனக்கு மற்றொரு சந்தர்ப்பம் கொடுக்கும்படி கேட்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவர்கள் என்னை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க ஆர்வம் கொண்டனர். ஆனால் நான் கூற வந்தது என்னவெனில், தோல்விக்காக நாம் அச்சப்பட கூடாது’’ என கூறியுள்ளார்.