search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரவி சாஸ்திரி, ரோகித் சர்மா
    X
    ரவி சாஸ்திரி, ரோகித் சர்மா

    மனதளவிலான விஷயம், சரியாக கையாண்டால் அவர்தான் மேட்ச் வின்னர்: ரவி சாஸ்திரி

    தொடக்க பேட்ஸ்மேனாக விளையாட ரோகித் சர்மாவுக்கு போதுமான அளவு வாய்ப்பு கொடுப்போம் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
    ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த தொடக்க பேட்ஸ்மேனாக விளங்கும் ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டியிலும் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாட இருக்கிறார். ஒயிட்-பாலில் சிறப்பாக விளையாடும் ரோகித் சர்மாவுக்கு ரெட்-பால் மிக சவாலாக இருக்கும் என விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

    இந்நிலையில், அவருக்கு போதுமான அளவு வாய்ப்புகள் வழங்கப்படும் என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘2015-16-ம் ஆண்டிலேயே மும்பை அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடுங்கள் என்று ரோகித் சர்மாவிடம் தெரிவித்தேன். நான் எப்போதுமே ரோகித் சர்மாவை முக்கிய காரணியாக நினைப்பவன். ஆனால், அது எப்போதுமே கடினம். 5 அல்லது 6-வது இடத்தில் களம் இறங்கி அப்படி செயல்படுவது எளிதானது அல்ல.

    ஆனால், இது மனதளவிலான விஷயம். அதை ரோகித் சர்மா சிறப்பாக செய்து விட்டால், மேட்ச் வின்னராக இருப்பார். அவருக்கு நாங்கள் போதுமான அளவு நேரம் கொடுக்க இருக்கிறோம். நாங்கள் அவருக்கு அழுத்தம் கொடுக்கமாட்டோம்.

    2015-ல் ரோகித் சர்மாவிடம் நான் ஏன் பேசினேன் என்றால், என்னுடைய சொந்த அனுபவத்தை வைத்து பேசினேன். இந்தியாவுக்காக ஏராளமான தொடக்க பேட்ஸ்மேன்கள் களம் இறங்கி விளையாடியிருப்பார்கள். ஆனால் ஒன்றிரண்டு பேர்தான் நிலைத்து நின்றிருப்பார்கள். ஆசிய கண்டத்தில் ஒருவேளை ஐந்து பேட்ஸ்மேன்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

    2001-02 வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக இந்தியா அணி ஒன்றிணைந்த போது, நான் சேவாக்கை சந்தித்தேன். அப்போது சேவாக்கை தொடக்க வீரராக களம் இறக்குவது குறித்து பேசப்பட்டது. நான் சேவாக் உடன் 15 நிமிடம் பேசினேன். அப்போது தொடக்க வீரராக களம் இறங்குங்கள் என்று கூறினேன். ஏனென்றால் அதுதான் சிறந்த பேட்டிங் நிலையாக இருக்கும் என்றேன்.

    சேவாக், ரவி சாஸ்திரி

    அதன்பின் அவர் தனக்கென்று ஒரு இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார். நான் அவரிடம் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடுவது மனதளவிலான ஆட்டம் (Mind Game) என்றேன். அதன்பிறகு இங்கிலாந்து தொடரின்போது சேவாக் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார்’’என்றார்.
    Next Story
    ×