search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எஸ் டோனி
    X
    எம்எஸ் டோனி

    வங்காளதேச தொடரில் எம்எஸ் டோனி ஆடமாட்டார்

    தென் ஆப்பிரிக்கா தொடரை அடுத்து, வங்காளதேச தொடரிலும் எம்எஸ் டோனி ஆடமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய அணிக்கு இரண்டு உலக கோப்பையை (2007- இருபது ஓவர், 2011- ஒருநாள் போட்டி) பெற்றுக் கொடுத்த டோனியின் நிலை தற்போது பரிதாபமாக இருக்கிறது.

    உலககோப்பை போட்டிக்கு பிறகு 38 வயதான டோனி ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு முடிவை வெளியிடுவதில் காலதாமதம் செய்கிறார். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும். 20 ஓவர் உலக கோப்பை வரை விளையாடும் ஆர்வத்தில் டோனி இருக்கிறார்.

    ஆனால் அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்க கிரிக்கெட் வாரியம் தயக்கம் காட்டி வருகிறது. குறிப்பாக 20 ஓவர் போட்டிகளில் டோனிக்கு இனி வாய்ப்பு இல்லை என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பே ராணுவத்தில் இணைந்து பணியாற்ற போவதாக கூறி டோனி 2 மாத விடுப்பை அறிவித்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான சிக்கல் தீர்ந்தது.

    ஆனாலும் தென்ஆப்பிரிக்க தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    இந்திய அணி அடுத்து வங்காளதேசத்துடன் விளையாடுகிறது. இந்த தொடரில் டோனிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுமா? அல்லது ஓரங்கட்டப்படுவாரா? என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் டோனி தனது விடுப்பை நவம்பர் மாதம் வரை நீட்டித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடர் மற்றும் விஜய் ஹசாரே போட்டிகளில் அவர் விளையாடமாட்டார்.

    டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்து மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டிசம்பர் 6-ந்தேதி இந்த தொடர் தொடங்குகிறது. இதில் டோனி விளையாடும் மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    டோனி தன்னுடைய எதிர் காலம் குறித்து வெளிப்படையாக தெளிவுபடுத்த வேண்டும் என்று முன்னாள் கேப்டன்கள் கவாஸ்கர், கங்குலி ஆகியோர் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தனர்.
    Next Story
    ×