search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டில் வெற்றி: பேட்டிங்கை தேர்வு செய்தது தவறானது - கோலி

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கை தேர்வு செய்தது தவறானது என தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
    பெங்களூர்:

    இந்தியாவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

    பெங்களூரில் நடந்த இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார், இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்னே எடுக்க முடிந்தது.

    தவான் அதிகபட்சமாக 25 பந்தில் 36 ரன் (4 பவுண்டரி, 2 சிக்சர்), எடுத்தார். ரபடா 3 விக்கெட்டும் போர்ச்சுன், ஹென்ரிக்ஸ் தலா 2 விக்கெட்டும், ‌ஷம்சி 1 விக்கெட்டும் எடுத்தனர். 135 ரன் இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி பின்னர் விளையாடியது.

    அந்த அணி 16.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கேப்டன் குயின்டன் டிகாக் 52 பந்தில் 79 ரன்னும் (6 பவுண்டரி, 5 சிக்சர்), பவுமா 23 பந்தில் 27 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஹர்திக் பாண்டியா 1 விக்கெட் கைப்பற்றினார்.

    இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

    முதலில் பேட்டிங் செய்த நாங்கள் மிகப் பெரிய ஸ்கோரை எடுக்க விரும்பினோம் கடந்த காலங்களில் முதலில் பேட்டிங் செய்து மிகப் பெரிய ஸ்கோரை குவித்தோம். தற்போது 20 முதல் 30 ரன்வரை குறைவாக எடுத்துள்ளோம். இது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

    பேட்டிங்கை தேர்வு செய்த முடிவு சிறந்ததாக அமையவில்லை. பேட்டிங் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஆடுகளம் மிகப் பெரிய ஸ்கோரை குவிக்கும் அளவுக்கு இல்லை என்பதை புரிந்து கொண்டோம்.

    உலக கோப்பைக்கு முன்பு வரை ‘டாஸ்’ வென்றால் முதலில் பேட்டிங் செய்வது என்று நினைத்தோம். அதன்படி செயல்பட்டோம் இது போன்ற முயற்சிகளில் எதிரான முடிவுகள் அமையும் போது அதற்கு ஏற்ற பதில்களை கண்டுபிடிக்க முடியும்.

    தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. முதல் இன்னிங்சில் ஆடுகளம் அவர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது. 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை சேசிங் எளிதானது.

    மற்ற போட்டிகளில் அதிக நேரம் நிலைத்து நின்று விளையாட பார்ட்னர்ஷிப் முக்கியமானது. இதில் 40-50 ரன் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை மாற்றிவிடும்.

    எங்களால் முடிந்த அளவு சரியான சமநிலை வீரர்களை தேர்வு செய்தோம். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் சிறப்பாகவே செயல்பட்டார்கள். அவர்களுக்கு இன்னும் சில போட்டிகளில் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு விராட்கோலி கூறியுள்ளார்.

    இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்தது. தர்மசாலாவில் நடந்த முதல் ஆட்டம் மழையால் ரத்து ஆனது. மொகாலியில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

    அடுத்து இரு அணிகள் இடையே 3 டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் அக்டோபர் 2-ந்தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

    Next Story
    ×