search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.சிவந்தி ஆதித்தன்
    X
    பா.சிவந்தி ஆதித்தன்

    கிரிக்கெட்டின் புகழை கெடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - பா.சிவந்தி ஆதித்தன் வலியுறுத்தல்

    சூதாட்டம் மூலம் கிரிக்கெட் விளையாட்டின் புகழை கெடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் கூறினார்.
    சென்னை:

    4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2-வது முறையாக மகுடம் சூடியது.

    இந்த தொடரின்போது அடையாளம் தெரியாத நபர் செல்போனில் தகவல் அனுப்பி சூதாட்ட முயற்சியில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் சில வீரர்கள் புகார் தெரிவித்தனர். ஒரு அணியின் பயிற்சியாளரின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து 3 பேர் கொண்ட கமிட்டியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த விவகாரம் குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் நேற்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புகழ்பெற்று வரும் டி.என். பி.எல். கிரிக்கெட் போட்டியில் இத்தகைய சர்ச்சை கிளம்பி இருப்பது வேதனை அளிக்கிறது. கிரிக்கெட் மீதான நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது ஆயுட்கால தடை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘மேட்ச் பிக்சிங்’ பிரச்சினை நீடித்தால் அது விளையாட்டு மீதான ஆர்வத்தை குறைத்து இந்த லீக் போட்டியையும் அழித்து விடும். அதற்கு இடம் தரக்கூடாது. சூதாட்ட புகார்கள் அணி உரிமையாளர்கள், ரசிகர்களுக்கு மட்டும் பாதிப்பு அல்ல. அணியின் வெற்றிக்காக 100 சதவீதம் பாடுபடும் நேர்மையான கிரிக்கெட் வீரர்களையும் பாதித்து விடும். அதுமட்டுமின்றி அவர்களின் உத்வேகத்தையும் குலைத்து விடும்.

    எங்களது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எடுத்துக் கொண்டால், தொடக்கத்திலேயே போதுமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். முதற்கட்ட பயிற்சியின் போதே, சந்தேகப்படும் படியான நபர்கள் யாரும் உங்களை தொடர்பு கொண்டால் அதுபற்றி உடனே எனது கவனத்துக்கு கொண்டு வாருங்கள். பிறகு ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புங்கள் என்று வீரர்களிடம் சொல்லி இருந்தேன். இத்தகைய நடவடிக்கை நேர்மையான வீரர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் ஊதியம் வீரர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை. அதனால் ஊதியத்தை உயர்த்தலாம் என்பது எனது யோசனையாகும். இதே போல் டி.என்.பி.எல். கிரிக்கெட் மீதான டி.வி. ரேட்டிங் இப்போதும் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனாலும் போட்டியில் விறுவிறுப்பையும், சுவாரஸ்யத்தையும் இன்னும் அதிகப்படுத்த வேண்டியது அவசியமாகும். இந்த போட்டியில் வெளிமாநில வீரர்களையும் விளையாட அனுமதி வழங்கினால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு பா.சிவந்தி ஆதித்தன் கூறினார்.

    Next Story
    ×