search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் காதிர்
    X
    பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் காதிர்

    மரணம் அடைந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் காதிருக்கு தெண்டுல்கர் புகழாரம்

    மரணம் அடைந்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் காதிர் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்று தெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் அப்துல் காதிர் (வயது 63) மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். 67 டெஸ்டில் 236 விக்கெட்டுகளும், 104 ஒரு நாள் போட்டிகளில் 132 விக்கெட்டுகளும் வீழ்த்தியவரான அப்துல் காதிர் மறைவுக்கு பாகிஸ்தான், இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    பாகிஸ்தான் பிரதமரும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் டுவிட்டர் பக்கத்தில், ‘அப்துல் காதிரின் மறைவு செய்தி வேதனை அளிக்கிறது. ஒரு நல்ல நண்பரை, பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்காக அரும்பங்காற்றிய அற்புதமான ஒரு கிரிக்கெட் வீரரை இழந்து விட்டேன். அப்துல் காதிர் ஒரு மேதை. எல்லா காலங்களிலும் சிறந்த ‘லெக்ஸ்பின்னர்’களில் ஒருவர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    அப்துல் காதிரை மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் என்று புகழாரம் சூட்டியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், ‘ஒரு முறை என்னை பார்த்த போது பாகிஸ்தான் அணிக்காக 20 ஆண்டுகள் விளையாடப்போகிறாய் என்று சொன்னார். அவரது கணிப்பு போலவே நடந்தது’ என்றார்.

    இந்திய முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர், ‘அப்துல் காதிருக்கு எதிராக நான் விளையாடியதை நினைத்து பார்க்கிறேன். எனது காலத்தில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கினார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்றார்.

    இந்திய முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கூறுகையில், ‘கிரிக்கெட்டை நேர்த்தியான உத்வேகத்துடன் விளையாடியவர், அப்துல் காதிர். 1987-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிய போது சில நினைவுகள் இன்னும் பசுமையாக இருக்கிறது. அவரது பந்து வீச்சில் நான் பந்தை நேர் பகுதிக்கு அடிக்கடி அடித்ததால் என்னிடம் வந்து, ‘ஏன் பந்தை எப்போதும் நேராகவே அடிக்கிறாய். இப்படியே தொடர்ந்து பந்தை விரட்டினால் இறுதியில் எனது கை அல்லது விரல்கள் தான் முறிந்து போகும் என்று சொன்னதும் சிரித்து விட்டேன். நவீன கால சுழற்பந்து வீச்சுக்கு அவர் முன்னோடி. அனைவரிடமும் கலகலப்பாக பழகக்கூடியவர்.

    1989-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற போது, முதல்முறையாக இந்திய அணிக்கு தேர்வாகி இருந்த 16 வயதே நிரம்பிய சச்சின் தெண்டுல்கர், பெஷாவாரில் நடந்த கண்காட்சி கிரிக்கெட்டில் அப்துல் காதிரின் ஒரே ஓவரில் 4 சிக்சர்களை பறக்க விட்டு மிரள வைத்ததை மறக்க முடியாது. தனது பந்து வீச்சை நொறுக்கிய போதிலும் அவர் தெண்டுல்கரை அழைத்து பாராட்டினார். இந்த மாதிரி எதிரணி பேட்ஸ்மேன்களை பாராட்டும் பவுலர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இந்த குணாதிசயத்தில் அப்துல் காதிர் தனித்துவம் வாய்ந்தவர்’ என்றார்.

    அப்துல் காதிருக்கு ஒரு மகளும், 4 மகன்களும் உள்ளனர். மகன்கள் அனைவரும் பாகிஸ்தானில் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார்கள்.
    Next Story
    ×