search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிஸ்பா உல் ஹக்
    X
    மிஸ்பா உல் ஹக்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், தேர்வு குழு தலைவராகவும் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.
    லாகூர்:

    இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை.

    இதையடுத்து புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய 5 பேர் கொண்ட கமிட்டியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்தது. இந்த கமிட்டி, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த ஆஸ்திரேலியாவின் டீன் ஜோன்ஸ், பாகிஸ்தானின் மொசின் கான் உள்ளிட்டோரிடம் நேர்காணல் நடத்தியது. இதில் கடைசி நேரத்தில் விண்ணப்பித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல்-ஹக்குக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. எதிர்பார்த்தது போலவே அவரே பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

    பாகிஸ்தானின் 30-வது தலைமை பயிற்சியாளராக மிஸ்பா இருப்பார். அத்துடன் தேர்வு குழு தலைவர் பொறுப்பும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியாளரே தேர்வு குழு தலைவராகவும் இருக்கும் நடைமுறை பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பின்பற்றப்படுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதிகாரமிக்கவராக மிஸ்பா உல்-ஹக் இருப்பார். அவரது பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

    இதே போல் மிஸ்பா உல்-ஹக்கின் பரிந்துரைப்படி பந்து வீச்சு ஜாம்பவான் வக்கார் யூனிஸ், பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். மிஸ்பா உல்-ஹக் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தபோது, வக்கார் யூனிஸ் தலைமை பயிற்சியாளராக பணியாற்றியது நினைவு கூரத்தக்கது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் இலங்கை அணியுடன் 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளில் (செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 9-ந்தேதி வரை) விளையாடுகிறது. இதில் இருந்து மிஸ்பா உல்-ஹக்கின் பயிற்சியாளர் பணி தொடங்கும். அதன் பிறகு பாகிஸ்தான் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

    45 வயதான மிஸ்பா உல்-ஹக், பாகிஸ்தான் அணியின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் என்ற பெருமைக்குரியவர் ஆவார். அவரது தலைமையில் அந்த அணி 56 டெஸ்டுகளில் விளையாடி 26-ல் வெற்றியும், 11-ல் டிராவும், 19-ல் தோல்வியும் கண்டுள்ளது. அவர் 75 டெஸ்ட் போட்டிகளிலும், 162 ஒரு நாள் போட்டிகளிலும், 20 ஓவர் கிரிக்கெட்டில் 39 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி இருக் கிறார். 2017-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற மிஸ்பா உல்-ஹக், கிரிக்கெட்டில் தனது 2-வது இன்னிங்சை தொடங்க இருக்கிறார்.

    மிஸ்பா உல்-ஹக் கூறுகையில், ‘பயிற்சியாளர் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பதை அறிவேன். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மிகவும் சவால் மிக்கதும், அதிகமானோர் விரும்பக்கூடியதுமான இந்த பொறுப்பை ஏற்க நான் தயாராக இருக்கிறேன். எங்களிடம் மிகவும் திறமையான சில வீரர்கள் இருக்கிறார்கள். சாதிக்கதுடிக்கும் இளம் வீரர்களும் இருக்கிறார்கள். அவர்களை சாதுர்யமான, அச்சமின்றி விளையாடக்கூடிய வீரர்களாக உருவாக்குவதற்கு எனது பயிற்சி மற்றும் ஆலோசனை மூலம் உதவுவேன்’ என்று குறிப்பிட்டார்.

    ஐ.சி.சி. தரவரிசையில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் 7-வது இடத்திலும், ஒரு நாள் போட்டியில் 6-வது இடத்திலும், 20 ஓவர் கிரிக்கெட்டில் முதலிடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×