search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    கேப்டன் பதவியில் அதிக வெற்றி: விராட் கோலி புதிய சாதனை படைப்பாரா?

    கிங்ஸ்டன் டெஸ்டில் வெற்றி பெற்று அதிக வெற்றிகளை குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை மீண்டும் வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆண்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருந்தது. இந்த டெஸ்டை ‘டிரா’ செய்தாலே இந்தியா தொடரை வென்றுவிடும். விராட்கோலி தலைமையிலான அணி இந்த டெஸ்டிலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. ஏற்கனவே 20 ஓவர் மற்றும் ஒரு நாள் தொடர்களை கைப்பற்றி இருந்தது.

    முதல் டெஸ்டில் நீக்கப்பட்ட தமிழக வீரர் அஸ்வினுக்கு இந்த டெஸ்டில் வாய்ப்பு கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் அல்லது ஜடேஜா நீக்கப்பட்டால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    வெற்றிக்கான அணி என்று கருதினால் கோலி அணியில் மாற்றம் செய்யமாட்டார் என்று கருதப்படுகிறது. ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து இறுதி நேரத்தில் வீரர்கள் தேர்வு குறித்து முடிவு செய்யப்படும்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை தொடரை இழக்காமல் இருக்க இந்த டெஸ்டில் கண்டிப்பாக வெல்ல வேண்டும்.

    அந்த அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்யும் ஆர்வத்தில் உள்ளது. ஏற்கனவே 20 ஓவர் மற்றும் ஒரு நாள் தொடர்களை இழந்ததால் டெஸ்ட் தொடரை இழக்காமல் இருக்க அந்த அணி கடுமையாக போராடும்.

    இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் அதிக டெஸ்டில் வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார். அவர் டோனியை முந்தி புதிய சாதனை நிகழ்த்துவார்.

    டோனி தலைமையில் இந்திய அணி 60 டெஸ்டில் 27-ல் வெற்றி பெற்று இருக்கிறது. 18 டெஸ்டில் தோல்வி ஏற்பட்டது. 15 டெஸ்ட் டிரா ஆனது. கோலி தலைமையில் 47-ல் டெஸ்டில் 27-ல் வெற்றி கிடைத்தது. 10 டெஸ்டில் தோல்வி ஏற்பட்டது. 10 டெஸ்ட் டிரா ஆனது.

    இந்த டெஸ்டில் வெற்றி பெறாவிட்டால் கோலி புதிய சாதனை படைக்க அடுத்த டெஸ்ட் தொடருக்காக காத்திருக்க வேண்டும்.

    டெஸ்டில் அதிக வெற்றிகளை பெற்ற ‘டாப் 4’ இந்திய கேப்டன்கள் வருமாறு:-

    1. டோனி - 27 வெற்றி, (60 டெஸ்ட்)

    2. கோலி - 27 வெற்றி (47).

    3. கங்குலி - 21 வெற்றி (49).

    4. அசாருதீன் - 14 வெற்றி (47).
    Next Story
    ×