search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பென் ஸ்டோக்ஸ்
    X
    பென் ஸ்டோக்ஸ்

    ஆஷஸ் 3-வது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

    ஹெட்டிங்லேயில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெட்டிங்லேயில் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. போட்டி தொடங்கும் முன் மழை பெய்ததால், ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.

    இதை பயன்படுத்த விரும்பிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஆர்சரின் (6) அபார பந்து வீச்சால் 179 ரன்னில் சுருண்டது.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. பவுன்சர், ஸ்விங், சீம் என பந்து வீச்சில் அசத்திய ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தை 67 ரன்னில் சுருட்டினர். ஹசில்வுட் ஐந்து விக்கெட்டும், பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், பேட்டின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    112 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா மார்னஸ் லாபஸ்சேக்னேயின் (80) சிறப்பான ஆட்டத்தால் 246 ரன்கள் குவித்தது.

    இதனால் ஒட்டுமொத்தமாக 358 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால், இங்கிலாந்து அணிக்கு 359 ரன்கள் என்ற இமாலய ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.

    நேற்றைய 3-வது நாளில் 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பேர்ன்ஸ் (7), ஜேசன் ராய் (8) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த ஜோ ரூட் மற்றும் டென்லி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இலக்கை எட்டி விடலாம் என இங்கிலாந்து நம்பியது. ஆனால், டென்லி 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 75 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் மேலும் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் இங்கிலாந்துக்கு சறுக்கல் ஏற்பட்டது. பேர்ஸ்டோவ் (36), பட்லர் (1), கிறிஸ் வோக்ஸ் (1) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    ஆனால் ஒரு பக்கம் பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்திருந்து. கைவசம் ஒரு விக்கெட் இருந்த நிலையில் 73 ரன்கள் தேவைப்பட்டது.

    பென் ஸ்டோக்ஸ்

    பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இங்கிலாந்தின் இலக்கு குறைந்து கொண்டே வந்தது. சதம் அடித்தாலும் தனது சந்தோசத்தை வெளிப்படுத்தால் அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என நினைப்பில் விளையாடினார்.

    இறுதியில் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். 125.4 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் 219 பந்தில் 11 பவுண்டரி, 8 சிக்சருடன் 135 ரன்கள் குவித்தார்.

    இந்த வெற்றியின் மூலம் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து 1-1 என சமநிலைப் படுத்தியுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன.
    Next Story
    ×