search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோக்கியோ ஒலிம்பிக்
    X
    டோக்கியோ ஒலிம்பிக்

    டோக்கியோ ஒலிம்பிக் டிக்கெட் விலை ரூ.43 லட்சம்

    அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான சொகுசு டிக்கெட் ரூ.43 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.
    டோக்கியோ:

    32-வது ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு (2020) ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இதில் 33 வகையான பந்தயங்களில் 206 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டிக்காக ஜப்பான் அரசாங்கம் கிட்டத்தட்ட ரூ.1¾ லட்சம் கோடி செலவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கி விட்டது. டிக்கெட் விலை இந்திய மதிப்பில் ரூ.1,700 முதல் ரூ.2 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. டிக்கெட் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் ரசிகர்களுக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படுகிறது. லட்சக்கணக்கான உள்ளூர் ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் காத்திருக்கிறார்கள்.

    இந்த நிலையில் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சகல வசதிகளுடன் கூடிய ஆடம்பர டிக்கெட்டை அறிமுகப்படுத்தியுள்ளனர். கோலாகலமான தொடக்க விழா, நிறைவு விழா மற்றும் 9 நாட்கள் நடக்கும் தடகள போட்டிகளை முழுமையாக பார்க்க வகை செய்யும் இந்த டிக்கெட்டின் விலை ரூ.43 லட்சமாகும். சொகுசு இருக்கை வசதி கொண்ட இந்த டிக்கெட்டில் உணவு, உற்சாக பானங்களும் அடங்கும். ஒலிம்பிக் டிக்கெட்டுக்கு கடும் கிராக்கி காணப்படுவதால் ஏற்கனவே டிக்கெட் வாங்கியவர்கள் அதை கூடுதல் தொகைக்கு மறுவிற்பனை செய்ய வாய்ப்புள்ளது.

    இது குறித்து போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், ‘ஒலிம்பிக் போட்டிக்காக மொத்தம் 78 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்படுகிறது. இதில் 70 முதல் 80 சதவீத டிக்கெட்டுகள் ஜப்பான் நாட்டு மக்களுக்கு விற்கப்படும். மீதமுள்ள டிக்கெட்டுகள் வெளிநாட்டவர்களுக்கும், ஸ்பான்சர் நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படும். டிக்கெட் மூலம் மொத்தம் ரூ.5,750 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.’ என்றனர்.

    ஒலிம்பிக் போட்டியையொட்டி பிரபலமான ஓட்டங்களில் வாடகை கட்டணம் 3-4 மடங்கு எகிறியுள்ளன. சில ஓட்டல்கள் கட்டணத்தை உயர்த்துவதற்காக ஏற்கனவே செய்யப்பட்ட முன்பதிவை ரத்து செய்வதாக புகார்கள் கிளம்பியுள்ளன. பெரும்பாலான 3 நட்சத்திர ஓட்டல்களில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளனர். ஒலிம்பிக் நெருங்கும் சமயத்தில் இந்த கட்டணம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
    Next Story
    ×