search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ் தலைவாஸ் அணி வீரர்
    X
    தமிழ் தலைவாஸ் அணி வீரர்

    புரோ கபடி 2019: தமிழ் தலைவாஸ் - ஜெய்ப்பூர் அணிகள் இன்று மோதல்

    தமிழ் தலைவாஸ் அணி 9-வது ஆட்டத்தில் தீபக் நிவாஸ் ஹூடா தலைமையிலான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை இன்று எதிர்கொள்கிறது.
    சென்னை:

    7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியின் 5-வது கட்ட ஆட்டங்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    சென்னை நகரை மையமாக கொண்ட அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி 3 வெற்றி, 3 தோல்வி, 2 டையுடன் 23 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

    தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்சை 39-26 என்ற கணக்கிலும், அரியானா ஸ்டீலர்சை 35-28 என்ற கணக்கிலும், குஜராத் பார்ச்சுனை 34-28 என்ற கணக்கிலும் வீழ்த்தியது. உ.பி. யோதாவுடன் 28-28 என்ற கணக்கிலும், புனேரி பல்தானை 31-31 என்ற கணக்கிலும் ‘டை’ செய்தது.

    தபாங் டெல்லியிடம் 29-30 என்ற கணக்கிலும், பாட்னா பைரேட்சிடம் 23-24 என்ற கணக்கிலும், பெங்களூர் புல்சிடம் 21-32 என்ற கணக்கிலும் தோற்றது.

    தமிழ் தலைவாஸ் அணி 9-வது ஆட்டத்தில் தீபக் நிவாஸ் ஹூடா தலைமையிலான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை இன்று (21-ந்தேதி) எதிர்கொள்கிறது. இரவு 8.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

    தமிழ் தலைவாஸ் அணி பலம் வாய்ந்த ஜெய்ப்பூரை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. உள்ளூரில் முதல் ஆட்டத்தில் பெங்களூரிடம் தோற்ற தமிழ் தலைவாஸ் 2-வது ஆட்டத்தில் புனே அணியுடன் ‘டை’ செய்தது.

    ஜெய்ப்பூர் அணி கடைசியாக மோதிய ஆட்டத்தில் அரியானாவுடன் தோற்றது. இதை தமிழ் தலைவாஸ் வீரர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    கடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியில் உள்ள தமிழக வீரர் அஜீத்குமார் முத்திரை பதிக்கும் வகையில் ஆடினார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    இதேபோல ராகுல் சவுத்ரியும் சிறப்பான நிலையில் உள்ளார். அவர் 57 புள்ளிகள் பெற்றுள்ளார். கேப்டன் அஜய் தாகூர் எதிர்பார்த்த அளவுக்கு திறமையை வெளிப்படுத்தவில்லை.

    வீரர்களை மடக்கி பிடிப்பதில் மஞ்சித் சில்லார், மொகித் சில்லார், ரன்சிங் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஜெய்ப்பூர் அணி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 31 புள்ளிகள் பெற்று பட்டியிலில் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி 7-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    ஜெய்ப்பூர் அணியில் கேப்டன் தீபக் ஹூடா (69 புள்ளி), நிலேஷ், அமித் ஹூடா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    புரோ கபடி ‘லீக்’ போட்டியை பொறுத்தவரை இரு அணிகளும் ஏற்கனவே 2 முறை மோதியுள்ளன. இந்த 2 ஆட்டத்திலும் ஜெய்ப்பூர் அணியே வெற்றி பெற்று இருக்கிறது.

    முன்னதாக இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் புனேரி பல்தான்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பெங்களூர் அணி 6-வது வெற்றிக்காகவும், புனே அணி 3-வது வெற்றிக்காகவும் காத்திருக்கிறது.
    Next Story
    ×