search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் திண்டுக்கல் டிராகன்ஸ்
    X
    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் திண்டுக்கல் டிராகன்ஸ்

    டிஎன்பிஎல் இறுதிப்போட்டி: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் நாளை பலப்பரீட்சை

    சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் இறுதிப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    4-வது டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதின. கடந்த 9-ந்தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன.

    இதன் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. கோவை கிங்ஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் 5 முதல் 8-வது இடங்களை பிடித்து போட்டியில் இருந்து வெளியேறின.

    ‘பிளேஆப்’ சுற்று கடந்த 11-ந்தேதி தொடங்கியது. நெல்லையில் நடந்த ‘குவாலிபையர்-1’ ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 ரன்னில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து நடந்த ‘எலிமினேட்டர்’ ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸை வீழ்த்தி வெளியேற்றியது.

    நத்தத்தில் நேற்று நடந்த ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 45 ரன்னில் மதுரை பாந்தர்சை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை (15-ந்தேதி) இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2-வது முறையாக டிஎன்பிஎல் கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. அந்த அணி ஏற்கனவே 2017-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. திண்டுக்கல் டிராகன்ஸை, ‘குவாலிபையர்-1’ ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீழ்த்தி இருந்தது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சமபலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் கோபிநாத் (293 ரன்), கங்கா ஸ்ரீதர் ராஜூ (225 ரன்), சசிதேவ் (177 ரன்) ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் பெரிய சாமி (16 விக்கெட்), அலெக்சாண்டர் (11 விக்கெட்), முருகன் அஸ்வின் (8 விக்கெட்) முத்திரை பதிக்கும் வகையில் பந்துவீசி வருகிறார்கள்.

    ஹரிஷ் குமார் ஆல்ரவுண்டரில் ஜொலித்து வருகிறார். அவர் 149 ரன் எடுத்துள்ளார். 11 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இதேபோல் ஆல்ரவுண்டர் விஜய்சங்கரும் அணிக்கு கூடுதல் பலம் சேர்ப்பார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ‘லீக்’ சுற்றில் 5 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. திருச்சி வாரியர்ஸை 41 ரன்னிலும், காரைக்குடி காளையை 54 ரன்னிலும், கோவை கிங்சை 9 விக்கெட் வித்தியாசத்திலும், காஞ்சி வீரன்சை 61 ரன்னிலும், டூட்டி பேட்ரியாட்சை 32 ரன்னிலும் வீழ்த்தியது.

    திண்டுக்கல் டிராகன்ஸ் (10 ரன்), மதுரை பாந்தர்ஸ் (33 ரன்) அணிகளிடம் மட்டுமே தோற்று இருந்தது. இதில் திண்டுக்கல் அணிக்கு எதிரான ‘குவாலிபையர்-1’ ஆட்டத்தில் பதிலடி கொடுத்தது. தற்போது அதே திண்டுக்கல் அணியை இறுதி ஆட்டத்தில் சந்திக்கிறது.

    இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இறுதிப்போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும். திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி முதல் முறையாக டிஎன்பிஎல் கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது.

    அந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக திகழ்கிறது. பேட்டிங்கில் ஜெகதீசன் (448 ரன்), ஹரி நிஷாந்த் (318 ரன்), பந்துவீச்சில் சிலம்பரசன் (14 விக்கெட்), ரோகித் (10 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    நாளைய ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    Next Story
    ×