search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றி கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள்
    X
    வெற்றி கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள்

    இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சில் சுருண்டது வெஸ்ட்இண்டீஸ்

    வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    அடுத்து இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் கயானாவில் நடந்த முதலாவது ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணியின் சார்பில் ஷிகார் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் ஷிகார் தவான் 2(3) ரன்னில் வெளியேற, அவரைத்தொடர்ந்து ரோகித் சர்மா 18(34) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ரிஷாப் பாண்ட் 20(35) ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக கேப்டன் விராட் கோலியுடன், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 112 பந்துகளில் தனது 42வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயாஸ் அய்யர் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி

    பின்னர் இந்த ஜோடியில் விராட் கோலி 120(125) ரன்களில் பிராத்வெய்ட் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக ஸ்ரேயாஸ் அய்யருடன், கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 71(68) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கேதர் ஜாதவ் 16(14) ரன்களும், அடுத்து களமிறங்கிய புவனேஷ்வர் குமார் 1(2) ரன்னும் எடுத்து வெளியேறினர்.

    இறுதியில் ரவீந்திர ஜடேஜா 16(16) ரன்களும், முகமது ஷமி 3(5) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டிஸ் அணியின் சார்பில் பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகளும், ஜாசன் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ் மற்றும் ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டிஸ் அணி களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் இவின் லீவிஸ் களம் இறங்கினர்.  இருவரும் இணைந்து நிதானமான ஆட்டத்தை தொடர்ந்த நிலையில் ஆட்டத்தின் 9.3வது ஓவரில் புவனேஷ்குமார் வீசிய பந்தில் அதிரடி ஆட்ட நாயகன் கிறிஸ் கெய்ல் 11 (24) தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  அடுத்ததாக களம் இறங்கிய ஷாய் ஹோப் 5 (10) வந்த வேகத்தில் வெளியேறினார்.  அவரை தொடர்ந்து ஹெட்மயர் களம் இறங்க ஆட்டத்தின் 12 வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் கழித்து தாமதாக தொடங்கியது.

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணி

    அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மழை காரணமாக ஆட்டம் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கு 270 ஆக நிர்ணயிக்கப்பட்டது.  தொடர்ந்து நிலைத்து நின்று ஆட நினைத்த வெஸ்ட் இண்டிஸ் அணி  வீரர் ஹெட்மயர் 18 (20) ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி வீரர் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  அவரை தொடர்ந்து களம் இறங்கிய நிகோலஸ் பூரன், இவின் லீவிஸ்வுடன் ஜோடி சேர்ந்து ரன்களை வெகுவாக குவிக்க துவங்கினர். இதில் இவின் லீவிஸ் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.  

    இந்த ஜோடியை பிரிக்க நினைத்த இந்திய அணி வீரர் குல்தீப் ஆட்டத்தின் 27.2வது ஓவரில் தனது பந்து வீச்சில்  இவின் லீவிஸ் 65 (80) விக்கெட்டை வீழ்த்தினார்.  அதனை தொடர்ந்து இந்திய அணிவீரர் புவனேஷ்வர்குமார் தனது 34 வது ஓவரில் நிகோலஸ் பூரன் 42 (52), ரோஸ்டன் சேஸ் 18 (23) ஆகிய இருவரது விக்கெட்களை வீழ்த்தி வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.  அவரை தொடர்ந்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டிஸ் அணி  வீரர்கள் இந்திய பந்து வீச்சை தாக்குப்பிடிக்காமல் பிராத்வேட் 0 (3), கெமார் ரோச்  0 (3)  இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர்.   அதனை தொடர்ந்து காட்ரெல் 17 (18), தாமஸ் 0 (1)  என்ற முறையில் விக்கெட்களை இழந்தனர், இறுதியில் வெஸ்ட் இண்டிஸ் அணி கேப்டன் ஜாசன் ஹோல்டர் 13 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

    இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களை இழந்து வெஸ்ட் இண்டிஸ் அணி 210 ரன்கள் எடுத்தது.  இதன் மூலம் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

    இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்களும்,  முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களும், அஹமது,  ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர். 
    Next Story
    ×