search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிசிசிஐ
    X
    பிசிசிஐ

    வீரர்களை தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் சோதனைக்கு உட்படுத்த பிசிசிஐ சம்மதம்

    இந்திய கிரிக்கெட் வீரர்களை தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் பரிசோதனைக்கு உட்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் அனைத்தும் தங்கள் வீரர்-வீராங்கனைகளை தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் சோதனைக்கு உட்படுத்தி வருகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) மட்டும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் சோதனைக்கு உட்படுத்த நீண்ட நாட்களாக மறுத்து வந்தது. தாங்கள் தன்னாட்சி பெற்ற அமைப்பு என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியது.

    இதுவரை இந்திய கிரிக்கெட் வாரியம் தங்கள் வீரர்களுக்கு சுவீடனை சேர்ந்த சர்வதேச ஊக்க மருந்து சோதனை நிறுவனத்திடம் பரிசோதனை செய்து வருகிறது. மற்ற தேசிய விளையாட்டு சம்மேளனங்களை போல் இந்திய கிரிக்கெட் வாரியமும் தங்கள் வீரர்களை தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் வற்புறுத்தி வந்தது. தங்களது வற்புறுத்தலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பணியாததால் சில வெளிநாட்டு கிரிக்கெட் அணிகளின் இந்திய வருகைக்கு அனுமதி அளிக்காமல் மத்திய விளையாட்டு அமைச்சகம் இழுத்தடித்தது.

    இந்த நிலையில் மத்திய விளையாட்டுத் துறை செயலாளர் ராதேஷியாம் ஜூலானியா, தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் டைரக்டர் ஜெனரல் நவீன் அகர்வால், இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொதுமேலாளர் சபா கரீம் ஆகியோர் இடையிலான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில், இந்திய கிரிக்கெட் வீரர்களை தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் பரிசோதனைக்கு உட்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டது. இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் போட்டி இல்லாத நேரத்திலும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையினர் ஊக்க மருந்து பரிசோதனை மேற்கொள்ள முடியும். ஊக்க மருந்து பரிசோதனைக்கு குறித்த நேரத்தில் ஆஜராக மறுத்தால் நடவடிக்கையும் எடுக்க முடியும்.

    இது குறித்து மத்திய விளையாட்டு துறை செயலாளர் ராதேஷியாம் ஜூலானியா அளித்த பேட்டியில், ‘தேசிய ஊக்க மருத்து தடுப்பு முகமையின் ஊக்க மருந்து தடுப்பு கொள்கைகளை பின்பற்றி நடக்க சம்மதம் தெரிவித்து இந்திய கிரிக்கெட் வாரியம் எழுத்துபூர்வமாக கடிதம் அளித்துள்ளது. எனவே இனிமேல் அனைத்து இந்திய கிரிக்கெட் வீரர்களும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். கிரிக்கெட் வீரர்களிடம் எங்கிருந்தாலும், எப்பொழுது வேண்டுமானாலும் ஊக்க மருந்து சோதனை நடைபெறும். சில ஆட்சேபனைகள் தெரிவித்தாலும், ஊக்க மருந்து தடுப்பு சட்ட விதிமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டது’ என்று தெரிவித்தார்.

    இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி கருத்து தெரிவிக்கையில், ‘நமது நாட்டின் சட்டத்தை இந்திய கிரிக்கெட் வாரியமும் ஏற்று நடக்க வேண்டியது அவசியமானதாகும். எனவே தான் ஊக்க மருந்து பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்தோம். நாங்கள் நிறைய விஷயங்களை எழுப்பினோம். அந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக விளையாட்டு அமைச்சகம் உறுதி தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வருவது குறித்து எதுவும் இந்த கூட்டத்தில் பேசப்படவில்லை’ என்றார்.

    தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் சோதனைக்கு வீரர்களை உட்படுத்த சம்மதித்ததற்கு இந்திய கிரிக்கெட் வாரிய சீனியர் நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரியோ, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியினரோ கொள்கை ரீதியிலான முடிவு எதுவும் எடுக்க முடியாது’ என்று அவர்கள் கூறியுள்ளது. 
    Next Story
    ×