search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றி பெறும் முனைப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள்
    X
    வெற்றி பெறும் முனைப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள்

    டிஎன்பிஎல்: தொடர் வெற்றி பெறும் முனைப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காஞ்சி வீரன்சுடன் இன்று மோதல்

    டி.என்.பி.எல். தொடரில் தனது வெற்றிப் பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்று காஞ்சி வீரன்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
    திண்டுக்கல்:

    நான்காவது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் நத்தம் மற்றும் நெல்லையில் நடந்து வருகிறது.

    நத்தத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் 19-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, காஞ்சி வீரன்சை எதிர்கொள்கிறது.

    கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் 10 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அதன்பின், திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை, கோவை கிங்ஸ் ஆகிய அணிகளை வரிசையாக புரட்டியெடுத்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 புள்ளிகளுடன் தற்போது 3-ம் இடத்தில் உள்ளது.

    தொடக்க ஆட்டக்காரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜூ, கோபிநாத் மற்றும் கேப்டன் கவுசிக் காந்தி ஆகியோர் பேட்டிங்கில் பார்மில் உள்ளனர். பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரியசாமி, ஹரிஷ்குமார், சுழற்பந்து வீச்சாளர்கள் அலெக்சாண்டர், முருகன் அஸ்வின் முத்திரை பதிக்கின்றனர். இதே கூட்டணியின் ஆதிக்கம் தொடருமானால் கில்லீசின் வெற்றிப் பயணத்தை தடுக்க முடியாது. இந்த ஆட்டத்திலும் வாகை சூடி அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்தும் முனைப்பில் கில்லீஸ் வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    அதிரடி காட்டும் காஞ்சி வீரன்ஸ் அணியினர்

    பாபா அபராஜித் தலைமையிலான காஞ்சி வீரன்ஸ் அணியும் கில்லீஸ் போன்று முதல் ஆட்டத்தில் தோற்று, அதன்பின் அடுத்த 3 ஆட்டங்களில் வெற்றியோடு எழுச்சி பெற்று 6 புள்ளிகளுடன் இருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்சுக்கு எதிராக காஞ்சி வீரன்ஸ் அணி 193 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு கேப்டன் அபராஜித் (168 ரன்), சஞ்சய் யாதவ் (140 ரன்), ஆல்–ரவுண்டர் ஆர்.சதீஷ் (107 ரன்) ஆகியோர் பக்கபலமாக உள்ளனர். மொத்தத்தில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் காஞ்சி வீரன்ஸ் அணியும் வலுவுடன் இருப்பதால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

    இதே மைதானத்தில் மதியம் 3.15 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் கோவை கிங்ஸ்– மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. தலா 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் உள்ள இவ்விரு அணிகளுக்கும் இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானதாக அமைந்திருப்பதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

    இரு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    Next Story
    ×