search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அணி வீரர்
    X
    மதுரை அணி வீரர்

    திருச்சி வாரியர்ஸ் அணியை சூப்பர் ஒவரில் வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ் அணி

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில், திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றிபெற்றது.
    திண்டுக்கல்:

    8 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் நத்தம் மற்றும் நெல்லையில் நடந்து வருகிறது. இதில் நத்தத்தில் நடந்த 16-வது லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்-நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. கடந்த இரு ஆட்டங்களில் ஆடாத முரளிவிஜய், திருச்சி அணிக்கு திரும்பினார்.

    ‘டாஸ்’ ஜெயித்த மதுரை கேப்டன் ஷிஜித் சந்திரன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி முரளிவிஜயும், முகுந்தும் திருச்சி அணியின் இன்னிங்சை தொடங்கினர். வலுவான தொடக்கம் அமைத்து தந்த இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் (13.3 ஓவர்) திரட்டினர். முகுந்த் 32 ரன்னில் (32 பந்து) கிளீன் போல்டு ஆனார்.

    இதன் பின்னர் ஒரு பக்கம் முரளிவிஜய் நிலைத்து நின்று ஆடினாலும், இன்னொரு பக்கம் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. மதுரை பவுலர்களின் கட்டுக்கோப்பான பந்து வீச்சை அடித்து நொறுக்க முடியாமல் திருச்சி பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.

    20 ஓவர் முடிவில் திருச்சி அணி 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. முரளிவிஜய் 78 ரன்களுடன் (66 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். மதுரை தரப்பில் ரஹில் ஷா, கிரன் ஆகாஷ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணியின் சார்பில் அருண் கார்த்திக் மற்றும் சரத் ராஜ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் சரத் ராஜ் 1(8) ரன்னில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆதித்யா கிரிதர் 15(8) ரன்களும், அதிரடி காட்டிய அருண் கார்த்திக் 46(26) ரன்களும், கேப்டன் ஷிஜித் சந்திரன் 12(14) ரன்களும், கர்னவார் 6(14) ரன்னும், அபிஷேக் தன்வார் 1(2) ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெகதீசன் கவுசிக் 35(33) ரன்களும், மிதுன் 12(15) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.  திருச்சி வாரியர்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக விக்னேஷ் 3 விக்கெட்டுகளும், சரவண் குமார், சாய் கிஷோர், பொய்யாமொழி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். முடிவில் மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டை ஆனது. பின்னர் சூப்பர் ஒவருக்கு போட்டி மாற்றப்பட்டது. அதில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றிபெற்றது.  
    Next Story
    ×