search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எஸ்கே பிரசாத்
    X
    எம்எஸ்கே பிரசாத்

    'நொண்டி வாத்து' என கூறிய கவாஸ்கருக்கு எம்.எஸ்.கே பிரசாத்தின் பதிலடி

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தேர்வுக்குழு குறித்து 'நொண்டி வாத்து' என கூறியதற்கு இந்திய அணி தேர்வாளர் எம்.எஸ்.கே பிரசாத் தனது பதிலை கூறியுள்ளார்.
    இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி மீண்டும் தேர்வு செய்யப்பட்டது குறித்து கவாஸ்கர் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இதில், 'நொண்டி வாத்து பற்றி பேசினால், அது இந்திய அணியின் தேர்வுக்குழுவுக்கு கச்சிதமாக பொருந்தும்.

    எதிர்பார்த்தபடி, இறுதிப் போட்டிக்கு இந்திய அணி நுழையாத நிலையில் கேப்டன் மட்டும் தனது பதவியில் தொடரலாம் என்பது தவறான ஒன்றுதான்.

    கேப்டனாக விராட் கோலி நீடிக்கலாமா? என்பது குறித்து பேசுவதற்கு கமிட்டி கூட்டப்படாமல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான வீரர்களை தேர்வு செய்ய கூடியதில் இருந்து, விராட் கோலி அவருடைய அணிக்கு கேப்டனா? அல்லது அவர் கேப்டனாக இருப்பதில் தேர்வுக்குழுவுக்கு  மகிழ்ச்சியா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

    விரைவில் புதிய தேர்வுக்குழு அமைய இருக்கிறது.  வருங்காலத்தில் வீரர்கள் ஆதிக்கம் இல்லாமல், தேர்வுக்குழு தேர்வு செய்யும் வீரர்களோடு விளையாடும் அணி நிர்வாகம் அமையும் என நம்புவோம்' என குறிப்பிட்டிருந்தார்.

    சுனில் கவாஸ்கர்

    இதற்கு பதிலளித்த இந்திய அணி தேர்வாளரான எம்.எஸ்.கே.பிரசாத் கூறுகையில், 'அணி தேர்வுக்குழுவில் இருக்கும் அனைவரும் எல்லா விதமான போட்டிகளிலும் விளையாடியவர்கள்தான். சர்வதேச போட்டிகளை தவிர 477 முதல்தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ளோம்.

    200 முதல்தர போட்டிகளை எங்கள் சமகாலத்தில் கண்டுள்ளோம். இதைவிட அணி தேர்வுக்கு அனுபவம் தேவையில்லை. இதுவே போதுமானது. அணி தேர்வுக்குழு குறித்து கவாஸ்கர் கூறிய கருத்து துரதிஷ்டவசமானது. ஆனால், நாங்கள் அனுபவ வீரர்களை மிகவும் மதிக்கிறோம். அனைவரின் கருத்துக்களும் வரவேற்கப்படும். ஏற்றுக்கொள்ளப்படும்.

    அதேசமயம் குழுவை புண்படுத்தும்படி வரும் கருத்துக்களால் தேர்வுக்குழு மேலும் பலமடையும். இதனால் எங்கள் ஒற்றுமைதான் இன்னும் அதிகரிக்கும்' என கூறியுள்ளார்.

    Next Story
    ×