search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றிப்பூரிப்பில் சிந்து.
    X
    வெற்றிப்பூரிப்பில் சிந்து.

    இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் - இறுதிப்போட்டியில் சிந்து

    இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து 21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் சென் யு பெயை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
    ஜகர்தா:

    இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஆல்-இங்கிலாந்து சாம்பியனான சென் யு பெயை (சீனா) எதிர்கொண்டார். இதில் தொடக்கத்தில் தடுமாறிய சிந்து 4-7 என்று பின்தங்கி இருந்தார். அதன் பிறகு சரிவில் இருந்து மீண்ட சிந்து முதல் செட்டை போராடி வசப்படுத்தினார். 2-வது செட்டிலும் லேசான சறுக்கலை (1-4) சந்தித்த சிந்து அதன் பிறகு மளமளவென புள்ளிகளை குவித்து எதிராளியை திணறடித்தார்.

    46 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான இந்த மோதலில் பி.வி.சிந்து 21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் சென் யு பெயை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இந்த சீசனில் சிந்து இறுதி சுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும். மற்றொரு அரைஇறுதியில் ஜப்பானின் அகானே யமாகுச்சி 21-9, 21-15 என்ற நேர் செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் தாய் ஜூ யிங்குக்கு (சீனதைபே) அதிர்ச்சி அளித்தார்.

    இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சிந்து, 4-ம் நிலை வீராங்கனையான யமாகுச்சியுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். யமாகுச்சிக்கு எதிராக இதுவரை 14 ஆட்டங்களில் மோதியுள்ள சிந்து அதில் 10-ல் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×