search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல்
    X
    டிஎன்பிஎல்

    டி.என்.பி.எல். கிரிக்கெட்: இன்று 2 ஆட்டங்கள்

    டி.என்.பி.எல். போட்டியின் 2-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. இதில் திருச்சி-காரைக்குடி, மதுரை-தூத்துக்குடி அணிகள் மோத உள்ளன.

    திண்டுக்கல்:

    4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    இதில் நடப்பு சாம்பியன் சீசெம் மதுரை பாந்தர்ஸ், முன்னாள் சாம்பியன்கள் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ், வி.பி.காஞ்சி வீரன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், ஐடீரிம் காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்று உள்ளன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    டி.என்.பி.எல். தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தியது.

    முதலில் விளையாடிய திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்னே எடுத்தது. கேப்டன் அஸ்வின் அதிகபட்சமாக 19 பந்தில் 37 ரன் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். அலெக்சாண்டர் 3 விக்கெட்டும், முருகன் அஸ்வின் 2 விக்கெட்டும், ராகுல், பெரியசாமி, சித்தார்த் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 105 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் திண்டுக்கல் 10 ரன்னில் வென்றது. அரீப் அதிகபட்சமாக 16 ரன் எடுத்தார்.

    சிலம்பரசன் 4 விக்கெட்டும், கவுசிக், எம்.முகமது தலா 2 விக்கெட்டும், அபினவ் ஒரு விக்கெட் எடுத்தனர்.

    டி.என்.பி.எல். போட்டியின் 2-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இந்த ஆட்டங்கள் நடக்கிறது.

    மாலை 3.15 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ்- ஐடிரீம் காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளன.

    இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் நடப்பு சாம்பியன் சீசெம் மதுரை பாந்தர்ஸ்- முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன. பலம் வாய்ந்த இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் வேட்கையில் உள்ளன. 

    Next Story
    ×