search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷ்ரேயாஸ் அய்யர்
    X
    ஷ்ரேயாஸ் அய்யர்

    இந்திய அணியில் விளையாட நான் தகுதியானவன்: ஷ்ரேயாஸ் அய்யர்

    இந்திய அணியில் விளையாட நான் தகுதியானவன் என வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிராக விளையாடி வரும் இளம் வீரரான ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.
    இந்திய ‘ஏ’ அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிராக விளையாடி வருகிறது.

    முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய ‘ஏ’ அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டி நடைபெற்ற ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடி ஷ்ரேயாஸ் அய்யர் 77 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

    உலகக்கோப்பை தொடருக்குப்பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது. இந்தத் தொடரின்போது இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    24 வயதேயான ஷ்ரேயாஸ் அய்யரை 4-வது வரிசையில் இந்தியா களம் இறக்கலாம் என்ற பேச்சு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியில் விளையாட நான் தகுதியானவன் என்று தெரிவித்துள்ளார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 210 ரன்கள் சேர்த்துள்ளார். 2017-ல் இலங்கைக்கு எதிராக இரண்டு அரைசதங்கள் அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் ஷ்ரேயாஸ் அய்யர் இதுகுறித்து கூறுகையில் ‘‘நான் முதன்முறையாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். இது எனக்கு சிறந்த அனுபவமாக இருக்கிறது. இங்குள்ள ஆடுகளங்கள் சற்று இந்திய ஆடுகளங்கள் போன்று உள்ளது. பந்து வீச்சாளர்களுக்கு சற்று சவாலாக இருக்கும்.

    ஷ்ரேயாஸ் அய்யர்

    நெருக்கடியான நிலையில் விளையாட விரும்புகிறேன். அப்போதுதான் என்னால் அதிக ரன்கள் குவிக்க இயலும். நெருக்கடியான நிலைக்கு தள்ளப்படும்போது அதிக ரன்கள் குவிக்க முயல்வேன். இந்திய அணியில் விளையாடுவதற்கான தகுதி என்னிடம் உள்ளது.

    ‘இந்திய ஏ’ அணிக்கான என்னுடைய பெர்பார்மன்ஸ் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். முந்தைய சீசனை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய திட்டம். ஒரு வீரராக முதிர்ச்சியடைய வேண்டும் என்றும், என்னுடைய தனிப்பட்ட ஆட்டம் வளர வேண்டும் என்றும் விரும்புகிறேன். கடைசி வரை நிலைத்து நின்று விளையாட விரும்புகிறேன்’’ என்றார்.
    Next Story
    ×