search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி
    X
    சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி

    உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.28 கோடி பரிசு

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.28 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
    லண்டன்:

    12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது.

    இதில் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதின.

    ‘டாஸ்’ வென்று முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்தது.

    நிக்கோலஸ் 55 ரன்னும் (4 பவுண்டரி), டாம் லாதம் 47 ரன்னும் (2 பவுண்டரி 1 சிக்சர்) எடுத்தனர். கிறிஸ் வோக்ஸ், புளுன்கெட் தலா 3 விக்கெட்டும், ஆர்ச்சர், மார்க்வுட் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    242 ரன் இலக்குடன் இங்கிலாந்து அணி பின்னர் களம் இறங்கியது.

    நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் அந்த அணி திணறியது. 86 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. இதனால் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு உருவானது.

    5-வது விக்கெட்டான பென்ஸ்டோக்ஸ்- பட்லர் ஜோடி இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அரை சதத்தை தொட்டனர்.

    பட்லர் 59 ரன் எடுத்து (60 பந்து, 6 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 196 ஆக இருந்தது. அதன் பிறகு பென்ஸ்டோக்ஸ் தனி ஒருவராக போராடி அணியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றார்.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட் இருந்தது. போல்ட் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் ஸ்டோக்ஸ் ரன் எடுக்கவில்லை.

    3-வது பந்தில் அவர் சிக்சர் அடித்தார். 4-வது பந்தில் கூடுதலாக 4 ரன் கிடைத்தது. 2-வது ரன்னுக்கு ஓடிய போது குப்தில் எறிந்த பந்து ஸ்டோக்ஸ் மட்டையில் பட்டு பவுண்டரிக்கு போனது. இது ஓவர் துரோவாக கருதப்பட்டது. இதனால் 4-வது பந்தில் 6 ரன்கள் கிடைத்தது.

    இதனால் 4 பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தில் 1 ரன் கிடைத்தது. 2-வது ரன்னுக்கு ஓடிய போது ஆதில்ரஷித் ரன் அவுட் ஆனார். இதனால் கடைசி பந்தில் 2 ரன் தேவை. இந்த பந்தில் 1 ரன்னே, 2-வது ரன்னுக்கு ஓடியபோது மார்க்வுட் ரன் அவுட் ஆனார்.

    இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.

    இங்கிலாந்து அணி 50 ஓவரில் 241 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பென்ஸ்டோக்ஸ் 84 ரன் (அவுட் இல்லை) எடுத்தார். பெர்குசன், ஜேம்ஸ் நீசம் தலா 3 விக்கெட்டும், ஹென்றி, கிராண்ட் ஹோம் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    ஆட்டம் ‘டை’ ஆனதால் உலகக் கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்ய சூப்பர் ஓவர் கடை பிடிக்கப்பட்டது.

    சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய இங்கிலாந்து 15 ரன்கள் எடுத்தது. பட்லர் 1 பவுண்டரி, 10 ரன்னும் பென்ஸ்டோக்ஸ் ஒரு பவுண்டரியும் 5 ரன்னும் எடுத்தனர்.

    16 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நியூசிலாந்து சூப்பர் ஓவரில் ஆடியது. ஆர்ச்சர் வீசிய முதல் பந்து வைடு ஆனது. இதற்கு மாற்றாக வீசப்பட்ட பந்தில் நீசம் 2 ரன் எடுத்தார்.

    2-வது பந்தில் அவர் சிக்சர் அடித்தார். 3-வது மற்றும் 4-வது பந்துகளில் நீசம் முறையை தலா 2 ரன் எடுத்தார். இதனால் கடைசி 2 பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தில் அவர் 1 ரன் எடுத்தார்.

    கடைசி பந்தில் 2 ரன் தேவை. மார்டின் குப்தில் ஒரு ரன்னை எடுத்து விட்டு 2-வது ரன்னுக்கு ஓடிய போது ரன் அவுட் ஆனார். இதனால் சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனது. இதனால் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது.

    சூப்பர் ஓவரும் ‘டை’யில் முடிந்ததால் அதிக பவுண்டரி அடிப்படையில் வெற்றியை நிர்ணயிக்கலாம் என்ற விதி இருக்கிறது.

    இங்கிலாந்து அணி அதிக பவுண்டரிகளை (சிக்சர் உள்பட) அடித்து இருந்ததால் உலக கோப்பையை கைப்பற்றியது. அந்த அணி முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை பெற்றது.

    இங்கிலாந்து அணி 26 பவுண்டரிகளும், நியூசிலாந்து அணி 17 பவுண்டரிகளும் அடித்து இருந்தன. 6 பவுண்டரிகள் அதிகமாக விளாசியதின் அடிப்படையில் இங்கிலாந்து உலக கோப்பையை வென்றது.

    சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.28 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.14 கோடி கிடைத்தது.

    ஆட்ட நாயகன் விருது பென்ஸ்டோக்சுக்கும், தொடர் நாயகன் விருது வில்லியம்சனுக்கும் கிடைத்தது.
    Next Story
    ×