search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுதம் காம்பிர்
    X
    கவுதம் காம்பிர்

    பவுண்டரி எண்ணிக்கை விதி அபத்தமானது- ஐசிசி மீது கவுதம் காம்பீர் சாடல்

    உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றியை நிர்ணயிப்பதற்கு பவுண்டரி எண்ணிக்கை விதியை பயன்படுத்தியதை இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கடுமையாக சாடியுள்ளார்.
    லண்டன்:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தலா 241 ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதிலும், இரண்டு அணிகளும் சமமான ரன்களையே (15 ரன்கள்) எடுத்தன.

    இதனால், பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இந்த விதியின்படி போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இந்த விதியின்படி, அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி (26) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, உலகக் கோப்பை வழங்கப்பட்டது. ஐசிசியின் இந்த விதியால் நியூசிலாந்து அணியின் வெற்றிக் கனவு தகர்ந்தது.

    தோல்வி அடைந்த சோகத்தில் குப்தில்


    ஆனால், இந்த போட்டியைப் பொருத்தவரை இங்கிலாந்து வெற்றி பெறவும் இல்லை, நியூசிலாந்து அணி தோல்வியடையவும் இல்லை என்பதே உண்மை. வெற்றியை முடிவு செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட பவுண்டரி எண்ணிக்கை விதியை, அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    இதுபற்றி பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் தங்கள் கருத்துக்களையும், ஆதங்கத்தையும் சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளியிட்டு வருகின்றனர்.

    இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பிர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஐசிசியின் இந்த விதியை கடுமையாக சாடி உள்ளார்.

    “இந்த விதியை பயன்படுத்தி எப்படி இறுதி முடிவு எடுத்தார்கள்? என்பது புரியவில்லை. ஐசிசியின் இந்த விதி அபத்தமான விதி. போட்டி டையில் முடிந்திருப்பதால், கடைசி வரை சிறப்பாக விளையாடிய இரண்டு அணிகளுக்கும் நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். என்னைப் பொருத்தவரை இரண்டு அணிகளுமே வெற்றியாளர்கள்தான்” என்று காம்பீர் கூறியுள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறுகையில், “அந்த விதிக்கு நான் உடன்படவில்லை. ஆனால், விதிகள் விதிகள்தான். உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இறுதிவரை நியூசிலாந்து அணி போராடியது இன்னும் என் மனதில் நிற்கிறது. இது வரலாற்றில் இடம்பெற்ற சிறப்பு மிக்க இறுதிப்போட்டி” என குறிப்பிட்டுள்ளார்.

    “இந்த கடினமான பவுண்டரி விதியை ஜீரணிப்பது கடினம். வெற்றியாளரை தீர்மானிக்க வேண்டும் தான். ஆனால், அதிக பவுண்டரிகள் அடிப்படையில் வெற்றியை தீர்மானிப்பதை விட, கோப்பையை பகிர்ந்துகொள்வது சிறப்பாக இருந்திருக்கும்” என இந்திய வீரர் முகமது கைப் கருத்து பதிவிட்டுள்ளார்.

    “நல்ல காரியம் செய்திருக்கிறது ஐசிசி. இந்த முடிவு ஜோக். இறுதிப்போட்டியில் விளையாடிய இரண்டு சாம்பியன் அணிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்” என நியூசிலாந்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஸ்காட் ஸ்டைரிஸ் விமர்சித்துள்ளார்.

    “டக்வொர்த் லீவிஸ் முறை உண்மையில் ரன்கள் மற்றும் விக்கெட் இழப்புகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இறுதிப் போட்டியில் மட்டும், பவுண்டரிகள் அடித்ததை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்வதா? என் கருத்தில் நியாயம் இல்லைதான். முடிவு பார்ப்பதற்கு நன்றாக இருந்திருக்க வேண்டும்” என ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான டீன் ஜோன்ஸ் கூறியுள்ளார்.
    Next Story
    ×