search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லண்டன் காமன்வெல்த் பாரா ஜூடோ போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ள வீராங்கனை சுபாஷினி
    X
    லண்டன் காமன்வெல்த் பாரா ஜூடோ போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ள வீராங்கனை சுபாஷினி

    காமன்வெல்த் பாரா ஜுடோ போட்டி - லண்டன் செல்ல பணம் இல்லாமல் தவிக்கும் மாற்றுத் திறனாளி மாணவி

    காமன்வெல்த் பாரா ஜுடோ போட்டியில் இந்தியாவின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட மாணவி லண்டன் செல்ல பணம் இல்லாமல் தவிக்கிறார்.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி, கூலி தொழிலாளி. இவரது மனைவி அம்மாசி.

    இத்தம்பதியருக்கு மணிமேகலை, சுபாஷினி என 2 மகள்களும், ராஜ் என்ற ஒரு மகனும் உள்ளனர். 3 பேருமே பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறளானிகள்.

    சேலம் அயோத்தியாப் பட்டணத்தில் இயங்கும் பார்வை குறைபாடு உள்ளோர் விடுதியில் 8 ஆண்டுகளாக தங்கி படித்து வரும் சுபாஷினி, தற்போது சேலம் அம்மாப்பேட்டை தனியார் கல்லூரியில் இளங்கலை வரலாறு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    உடலில் உள்ள குறைபாட்டை வென்று, ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறு வயதிலேயே தோன்றியதால், கடந்த 7 ஆண்டுகளாக ஜூடோ கலையை மிகுந்த ஆர்வத்தோடு கற்று ஆண்டு தோறும் தேசிய அளவில் தங்கம், வெள்ளி பதக்கங்களை பெற்று சாதித்து வருகிறார்.

    உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பாரா ஜூடோ போட்டியில் பங்கேற்ற சுபாஷினி, 44 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றார்.

    இதனையடுத்து, இங்கிலாந்து தலைநகர் லண்டன் பக்கிம்ஹாமில் வருகிற செப்டம்பர் மாதம் 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறும் காமன் வெல்த் பாரா ஜூடோ போட்டியில் 44 எடை பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க தனி ஒருவராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றால் வருகிற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று சர்வதேச அளவில் சாதனை படைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும்.

    ஆனால் மாற்றுத்திறனாளியாக இருந்தும் ஜூடோ போட்டியில் சாதனை படைத்துவரும் சுபாஷினி, லண்டனுக்கு சென்று காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பது போதிய வசதியில்லாததால் செய்வதறியாது தவித்து வருகிறார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, எனது குடும்பம் வறுமையில் உள்ளதால் லண்டன் செல்வதற்கு போதுமான பண வசதி இல்லை.

    இந்த போட்டியில் எப்படியாவது வெல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால் அதற்கான வசதி, வாய்ப்பு இல்லாததால் என்ன செய்யப்போகிறேன் என தெரியவில்லை என்று கூறினார்.

    மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள இந்த மாணவிக்கு உதவி செய்ய முதல்-அமைச்சர் மற்றும் சமூக சேவை அமைப்புகள் முன் வரவேண்டும் என்று சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×