search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்படின் நைப் - வங்காளதேச கேப்டன் மோர்தசா
    X
    ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்படின் நைப் - வங்காளதேச கேப்டன் மோர்தசா

    ஆப்கானிஸ்தான் வெற்றிக்கணக்கை தொடங்குமா? வங்காளதேச அணியுடன் இன்று மோதல்

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுதம்டனில் இன்று நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான வங்காளதேசமும், ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன.
    சவுதம்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுதம்டனில் இன்று நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான வங்காளதேசமும், ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன. மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 5 புள்ளியுடன் உள்ளது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி பற்றி அந்த அணியால் நினைத்து பார்க்க முடியும். ஏற்கனவே தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீசுக்கு அதிர்ச்சி அளித்திருக்கும் வங்காளதேச அணிக்கு, ஆப்கானிஸ்தானுடனான ஆட்டம் பெரிய அளவில் கடினமாக இருக்காது. என்றாலும் முந்தைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சு தாக்குதல் மூலம் இந்திய பேட்ஸ்மேன்களை ஆப்கானிஸ்தான் அச்சுறுத்தியதால் வங்காளதேச வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அணுகுவார்கள். நேற்றைய வலை பயிற்சியின்போது சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசனுக்கு பந்து ஒன்று தலையில் தாக்கியது. காயம் பயப்படும்படி இல்லை என்றாலும் இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாடுவது சந்தேகம் தான்.

    இந்த உலக கோப்பையில் புள்ளி கணக்கை தொடங்காத ஒரே அணி ஆப்கானிஸ்தான் தான். குல்படின் நைப் தலைமையிலான அந்த அணி இதுவரை ஆடியுள்ள 6 ஆட்டங்களிலும் தோல்வியையே சந்தித்து இருக்கிறது. குறைந்தது ஒரு வெற்றியோடு வெளியேற வேண்டும் என்பதில் தீவிரம் காட்டும் ஆப்கானிஸ்தானுக்கு இந்த ஆட்டம் நல்ல வாய்ப்பாகும். வங்காளதேச அணியில் தமிம் இக்பால், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர்ரஹிம், லிட்டான் தாஸ் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இவர்களை சீக்கிரம் காலி செய்து விட்டால் ஆப்கானிஸ்தானின் ஆசை நிறைவேற வாய்ப்பு உண்டு. மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 7 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 4-ல் வங்காளதேசமும், 3-ல் ஆப்கானிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    Next Story
    ×