search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக சாதனை படைப்பேன் என்று நினைக்கவில்லை - மோர்கன்
    X

    உலக சாதனை படைப்பேன் என்று நினைக்கவில்லை - மோர்கன்

    17 சிக்சர் அடித்து உலக சாதனை படைப்பேன் என்று நினைக்கவில்லை என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியுள்ளார்.
    மான்செஸ்டர்:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று மான்செஸ்டரில் நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 397 ரன் குவித்தது. கேப்டன் இயன் மோர்கன் 71 பந்தில் 148 ரன் எடுத்தார். அவர் 17 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடித்தார். பேர்ஸ்டோவ் 90 ரன்னும், ஜோரூட் 88 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 50 ஓவரின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 247 ரன்னே எடுத்தது.

    இதனால் இங்கிலாந்து 150 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும்.

    நேற்றைய போட்டியில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் 17 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார்.

    இதற்கு முன்பு ரோகித் சர்மா (இந்தியா), டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிகா), கிறிஸ்கெய்ஸ் (வெஸ்ட் இன்டீஸ்) ஆகியோர் தலா 16 சிக்சர் அடித்ததே சாதனையாக இருந்தது.

    அதை மோர்கன் முறியடித்து புதிய சாதனை படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் சிக்சர்கள் மூலம் 100 ரன்னை கடந்த முதல் வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.

    மோர்கன் 57 பந்தில் சதம் அடித்தார். இது உலக கோப்பை கிரிக்கெட்டில் 4-வது அதிவேக சதமாக அமைந்தது.

    வெற்றி குறித்து மார்கன் கூறியதாவது:-

    இந்த போட்டி எங்களுக்கு அற்புதமாக அமைந்தது. ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. எங்களது தொடக்க வீரர்கள் அருமையான தொடக்கத்தை அமைத்தனர். பேர்ஸ்டோவ், ஜோரூட் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இன்று (நேற்று) எனது நாளாக (உலக சாதனை) இருக்க போகிறது என்று எந்த கட்டத்திலும் நினைக்கவில்லை. இது போன்ற ஆட்டத்தை நான் வெளிப்படுத்துவேன் என்று நிச்சயமாக நினைக்கவில்லை.

    இதே போன்ற அதிரடி இன்னிங்சை வெளிப்படுத்தும் வீரர்கள் நிறைய பேர் அணியில் உள்ளனர். ஆனால் இளைஞர்களுக்கு நிகராக விளையாடியது அற்புதமானது.

    ஆப்கானிஸ்தான் அணி நிறைய திறமைகளை கொண்டுள்ளது. அவர்களது சுழற்பந்து வீச்சு உண்மையிலேயே சவால் அளிக்கக் கூடியதாக உள்ளது. அலட்சியமாக விளையாடகூடாது. ஆப்கானிஸ்தனுக்கு எதிராக சில கேட்சுகளை தவறவிட்டோம். அதை சரி செய்ய வேண்டியது அவசியம்.

    அடுத்த 2 மற்றும் 3 போட்டிகளின் முக்கியமானது. ஒவ்வொரு ஆட்டத்திலும் இதுபோல் சிறப்பாக விளையாடுவது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்து அடுத்து வருகிற 21-ந்தேதி இலங்கையுடன் மோதுகிறது.
    Next Story
    ×