search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது மிகவும் நிம்மதி: தென்ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிசிஸ்
    X

    ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது மிகவும் நிம்மதி: தென்ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிசிஸ்

    ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது மிகவும் நிம்மதி என்று தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கார்டிப் மைதானத்தில் நேற்று இரவு நடந்த 21-வது ‘லீக்’ ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்க வீரர்களின் அனல் பறக்கும் பந்து வீச்சுக்கு விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி 34.1 ஓவர்களில் 125 ரன்னில் சுருண்டது.

    ரஷித் கான் அதிகபட்சமாக 25 பந்தில் 35 ரன்னும் (6 பவுண்டரி), தொடக்க வீரர் நூர் அலி சத்ரன் 32 ரன்னும் எடுத்தனர். இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டும், பெலுக்வாயோ 2 விக்கெட்டும், ரபடா 1 விக்கெட்டும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் விளையாடும்போது மழையால் 2 முறை ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 28.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குயின்டன் டி காக் 68 ரன்னும், ஹசிம் அம்லா 41 ரன்னும் எடுத்தனர்.

    தென்ஆப்பரிக்கா பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா ஆகியவற்றிடம் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது. வெஸ்ட்இண்டீஸ் உடன் மோதிய 4-வது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    ஒரு வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் தென் ஆப்பிரிக்கா 3 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 6-வது ஆட்டத்தில் நியூசிலாந்தை வருகிற 19-ந்தேதி சந்திக்கிறது.

    ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து 4-வது தோல்வியை தழுவியது. அந்த அணி ஏற்கனவே ஆஸ்திரேலியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும், இலங்கையுடன் 34 ரன் வித்தியாசத்திலும், நியூசிலாந்திடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்று இருந்தது.

    புள்ளி எதுவும் பெறாமல் கடைசி இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் 5-வது போட்டியில் இங்கிலாந்தை வருகிற 18-ந்தேதி எதிர் கொள்கிறது.

    இந்த வெற்றி குறித்து தென்ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிசிஸ் கூறியதாவது-

    முதல் வெற்றியால் நாங்கள் மிகவும் நிம்மதி அடைந்துள்ளோம். இந்த நாள் எங்களுக்கு நன்றாக இருந்தது. நல்ல தொடக்கம் அமைவது முக்கியமானது. எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆப்கானிஸ்தான் அணியை கட்டுப்படுத்தினார்கள். மிடில் ஓவரில் கிறிஸ் மோரிஸ், இம்ரான் தாஹிர் அபாரமாக பந்து வீசினார்கள், இம்ரான் தாஹிர் கடந்த 2 ஆண்டுகளாக அணிக்கு பலமாக இருந்து வருகிறார். மிடில் ஓவரில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமையானவர்.

    குயின்டன் டி காக்கும், அம்லாவும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். அம்லா ரன் சேர்த்தது முக்கியமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோற்றது குறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதின் நைப் கூறும்போது, “நாங்கள் மீண்டும் ஒரே மாதிரியான தவறை செய்கிறோம். பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை. நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசிய மானது” என்றார்.
    Next Story
    ×