search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானுக்கு எதிராக முழு திறமையை வெளிப்படுத்துவோம்- விராட்கோலி
    X

    பாகிஸ்தானுக்கு எதிராக முழு திறமையை வெளிப்படுத்துவோம்- விராட்கோலி

    வருகிற 16-ந்தேதி பாகிஸ்தானுக்கு எதிராக முழு திறமையை வெளிப்படுத்துவோம் என்று இந்திய கேப்டன் விராட்கோலி கூறியுள்ளார்.

    நாட்டிங்காம்:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நாட்டிங்காமில் இந்தியா- நியூசிலாந்து மோத இருந்த ஆட்டம் மழையால் டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்பட்டது.

    இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்தியா 3 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு ஆட்டம் முடிவு இல்லை என 5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    நியூசிலாந்து 4 ஆட்டத்தில் 3 வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. அந்த அணி 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

    தோல்வியே சந்திக்காத இரு அணிகள் மோதுவதால் இந்த போட்டியை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். ஆனால் மழையால் ஒரு பந்து கூட வீசாமல் ரத்தானதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    போட்டி ரத்தான பிறகு இந்திய கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

    இந்தியா - நியூசிலாந்து போட்டி அவுட்- பீல்டு விளையாடுவதற்கு ஏற்ற வகையில் இல்லாத நிலையில் ரத்து செய்யப்பட்டது சரியான முடிவு. ஏனென்றால் எப்போதுமே வீரர்களின் பாதுகாப்புதான் முக்கியம். இல்லையென்றால் வீரர்களுக்கு காயம்தான் ஏற்படும்.


    இரண்டு அணிகளும் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இந்த ஆட்டத்தில் புள்ளியை பகிர்ந்து கொள்வது மோசமானதல்ல.

    அடுத்து நாங்கள் வருகிற 16-ந்தேதி பாகிஸ்தானுடன் மோத இருக்கிறோம். இந்த போட்டியை வைத்து உணர்வு பூர்வமான சூழல் நிலவுவதால் முதல் முறையாக உலக கோப்பையில் விளையாடும் வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படலாம். ஆனால் களத்துக்குசென்றுவிட்டால் எல்லாமே அமைதியாகி விடும். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு வகுத்துள்ள வியூகங்களை செயல்படுத்துவோம்.

    இது போன்ற மிகப்பெரிய ஆட்டத்தில் விளையாடுவது மிகப்பெரிய கவுரவமாகும். இத்தகைய ஆட்டங்கள் எங்களது முழு திறமையை வெளிக்கொண்டு வரும். இதனால் பாகிஸ்தானுடன் சிறப்பாக விளையாடுவோம்.

    ஷிகர் தவானுக்கு கை விரலில் ஏற்பட்டுள்ள காயம் விரைவில் குணமடைந்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் லீக் சுற்றின் கடைசி கட்டத்திலும், அரை இறுதியிலும் விளையாடுவார் என்று நம்புகிறேன். ஷிகர் தவான் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று விரும்புகிறார்.

    இதுபோன்ற மனநிலையில் அவர் இருப்பதால் விரைவில் காயத்தில் இருந்து குணமடைந்துவிடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வக்கார் யூனுஸ் கூறும் போது, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எப்போது விளையாடினாலும் அது மிகப்பெரிய போட்டிதான்.

    ஆனால் வருகிற 16-ந்தேதி நடக்கும் ஆட்டம் முன்பைவிட மிக முக்கியமானது. உலக கோப்பை போட்டி தொடரில் பாகிஸ்தான் நீடிக்க வேண்டுமென்றால் இந்தியாவுக்கு எதிராக ‘ஏ’ பிளஸ் செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

    Next Story
    ×