search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது வெற்றி பெறுமா? கொல்கத்தாவுடன் நாளை பலப்பரீட்சை
    X

    சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது வெற்றி பெறுமா? கொல்கத்தாவுடன் நாளை பலப்பரீட்சை

    சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றனர். #CSKvsKKR
    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஆட்டத்தில் 4 வெற்றி, 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.

    டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சை 8 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

    4-வது போட்டியில் மும்பை இந்தியன்சிடம் 37 ரன்னில் தோற்று 5-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 22 ரன்னில் தோற்கடித்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 6-வது ஆட்டத்தில் தினேஷ்கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சை சந்திக்கிறது. இந்த ஆட்டம் நாளை (9-ந் தேதி) இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

    பலம் வாய்ந்த கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது.

    சேப்பாக்கத்தில் இதுவரை நடந்த 3 ஆட்டத்திலும் சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்று இருந்தது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருப்பதால் முத்திரை பதிக்க முடிந்தது. இதனால் நம்பிக்கையுடன் நைட்ரைடர்சை எதிர் கொள்ளும்.

    கேப்டன் பதவியிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படும் டோனி அணியின் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் 4 ஆட்டத்தில் 156 ரன்கள் எடுத்து உள்ளார். 3 ஆட்டத்திலும் அவுட் ஆகாததால் சராசரி 156 ஆகும். ஸ்டிரைக்ரேட் 124.80 ஆகும்.

    ரெய்னா (118 ரன்), கேதர் ஜாதவ் (106 ரன்) ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க வரிசையில் வாட்சன் எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் அதிரடியை வெளிப்படுத்தவில்லை. டுபிலிசிஸ் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு கடந்த ஆட்டத்தில் அரை சதம் எடுத்தார். இதனால் அவர் தொடக்க வரிசையில் நீடிப்பார். அம்பதிராயுடு மிடில் ஆர்டரில் ஆடுகிறார்.

    பிராவோ காயத்தில் இருந்து குணமாக 2 வாரம் தேவை என்பதால் நாளைய போட்டியிலும் ஆட மாட்டார்.

    சூப்பர் சிங்கின் பலமே சுழற்பந்து வீச்சுதான். இம்ரான் தாகீர் ( 7 விக்கெட்), ஹர்பஜன்சிங் (5 விக்கெட்), ஜடேஜா (4 விக்கெட்) ஆகிய 3 பேரும் சுழற்பந்தில் நல்ல நிலையில் உள்ளனர். சேப்பாக்கம் ஆடுகளத்துக்கு ஏற்ற வகையில் அவர்கள் திறமையாக பந்து வீசி வருகிறார்கள்.

    வேகப்பந்தில் தீபக் சாஹர் (5 விக்கெட்), புதுமுக வீரர் ஸ்காட் ஆகியோர் சிறப்பாக வீசக்கூடியவர்கள். பிராவோ இல்லாதது வேகப்பந்தில் பலவீனமே.

    கொல்கத்தா அணி திறமை வாய்ந்ததே என்பதால் அதனை வீழ்த்த கடுமையாக போராட வேண்டும்.

    சென்னை அணியை போலவே கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் 4 வெற்றி, 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. ரன்ரேட்டில் முன்னணியில் இருப்பதால் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

    கொல்கத்தா அணி ஐதராபாத் (6 விக்கெட்), பஞ்சாப் (28 ரன்), பெங்களூர் (5 விக்கெட்), ராஜஸ்தான் (8 விக்கெட்) ஆகியவற்றை வீழ்த்தியது. டெல்லியிடம் சூப்பர் ஓவரில் வீழ்ந்தது.

    ரசலின் அதிரடியான ஆட்டம் அந்த அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளது. அவர் 5 ஆட்டத்தில் 22 சிக்சர்கள் அடித்துள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்சுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார். இது தவிர கிறிஸ் லின், ரானா, சுனில் நரேன், குல்தீப் யாதவ் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்களின் அதிரடி பலமாக இருக்கும். இது கூடுதல் சிறப்பை ஏற்படுத்தும். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கருதப்படுகிறது. #CSKvsKKR
    Next Story
    ×