search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரசுலின் அதிரடியால் ஆர்சிபியை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
    X

    ரசுலின் அதிரடியால் ஆர்சிபியை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் ரசுலின் அதிரடியால் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீழ்த்தியது. #IPL2019 #RCBvKKR
    ஐபிஎல் தொடரின் 17-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்திவ் படேல், விராட் கோலி ஆகியோர் இறங்கினர்.
    தொடக்கம் முதல் இருவரும் அடித்து ஆடினர்.

    அணியின் எண்ணிக்கை 64 ஆக இருக்கும்போது பார்திவ் படேல் 25 ரன்னில் அவுட்டானார். அவருக்கு அடுத்து ஏபி டி வில்லியர்ஸ் களமிறங்கினார்.

    ஆரம்பம் முதலே விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஜோடி அதிரடி காட்டியது. கொல்கத்தா அணியினரின் பந்து வீச்சை துவம்சம் செய்து சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.

    சிறப்பாக விளையாடிய விராட் கோலி 49 பந்தில் 2 சிக்சர், 9 பவுண்டரியுடன் 84 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதிரடி காட்டிய டி வில்லியர்ஸ் 31 பந்தில் 4 சிக்சர், 5 பவுண்டரியுடன் 63 ரன்னில் வெளியேறினார்.
     
    இறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை எடுத்துள்ளது. ஸ்டோனிஸ் 13 பந்தில் 28 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில் சுனில் நரின் (10 ரன்), ராபின் உத்தப்பா (33 ரன்), கிறிஸ் லின் (43 ரன்), நிதிஷ் ரானா (37 ரன்), கேப்டன் தினேஷ் கார்த்திக் (19 ரன்) ஆகியோர் சீரான இடைவெளியில் வெளியேறினர். அப்போது கொல்கத்தா அணிக்கு 3 ஓவர்களில் 53 ரன்கள் தேவைப்பட்டது.

    இந்த நெருக்கடியான கட்டத்தில் அடியெடுத்து வைத்த அதிரடி மன்னன் ஆந்த்ரே ரசல், ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றினார். 18-வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் விரட்டிய ரசல், டிம் சவுதி வீசிய 19-வது ஓவரில் 4 சிக்சரும், ஒரு பவுண்டரியும் நொறுக்கினார். அத்துடன் ஆட்டமும் கொல்கத்தா பக்கம் திரும்பியது. அந்த அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 206 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. ரசல் 48 ரன்களுடன் (13 பந்து, ஒரு பவுண்டரி, 7 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். கொல்கத்தா அணிக்கு இது 3-வது வெற்றியாகும். பெங்களூரு அணி தொடர்ச்சியாக சந்தித்த 5-வது தோல்வியாகும். #IPL2019 #RCBvKKR

    Next Story
    ×