search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி
    X

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது. #IPL2019 #RRvRCB #IPL2019 #RRvRCB

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 14-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. பெங்களூரு அணியில் மூன்று மாற்றமாக ஷிவம் துபே, ராய் பர்மான், கிரான்ட்ஹோம் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அக்‌ஷ்தீப் நாத், நவ்தீப் சைனி, மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மார்கஸ் ஸ்டோனிஸ் பாகிஸ்தான் தொடரை முடித்துகொண்டு பெங்களூரு அணியுடன் இணைந்த பிறகு இந்த சீசனில் ஆடும் முதல் ஆட்டம் இதுவாகும்.

    ராஜஸ்தான் அணியில் காயமடைந்த சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்தேவ் உனட்கட் ஆகியோருக்கு பதிலாக ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன் இடம் பிடித்தனர். தொடர்ந்து 4-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ரஹானே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.



    இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணிக்கு கேப்டன் விராட் கோலியும், விக்கெட் கீப்பர் பார்த்தீப் பட்டேலும் நல்ல தொடக்கம் அமைத்து தந்தனர். சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் வந்ததும் பெங்களூரு அணி தகிடுதத்தம் போட்டது. முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த நிலையில், விராட் கோலி (23 ரன், 25 பந்து, 3 பவுண்டரி) கோபால் வீசிய கூக்ளி வகை பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த டிவில்லியர்ஸ் (13 ரன்), ஹெட்மயர் (1 ரன்) ஆகியோரும் கோபாலின் சுழல் வலையில் சிக்கினர். ‘இளம் புயல்’ ஹெட்மயர் இதுவரை ஆடிய 4 ஆட்டங்களிலும் ஒற்றை இலக்கத்தை தாண்டாத பரிதாபம் தொடருகிறது.

    இதன் பின்னர் பார்த்தீவ் பட்டேலும், மார்கஸ் ஸ்டோனிசும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆனால் ஸ்கோர் வேகம் மந்தமானது. பார்த்தீவ் பட்டேல் தனது பங்குக்கு 67 ரன்கள் (41 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். அவருக்கு பிறகு வந்த மொயீன் அலி, அணி 150 ரன்களை கடக்க உதவினார். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரில் ஸ்டோனிஸ்-மொயீன் அலி இணைந்து 17 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தனர்.

    20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. ஸ்டோனிஸ் 31 ரன்களுடனும் (28 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), மொயீன் அலி 18 ரன்னுடனும் (9 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 12 ரன்கள் மட்டுமே வழங்கி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    பின்னர் 159 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரஹானேவும், ஜோஸ் பட்லரும் களம் புகுந்தனர். ரஹானே 1 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற விராட் கோலி கோட்டை விட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரஹானே, அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைய வித்திட்டார். அணியின் ஸ்கோர் 60 ரன்களாக (7.4 ஓவர்) உயர்ந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. ரஹானே 22 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மறுமுனையில் அரைசதம் அடித்த ஜோஸ் பட்லர் 59 ரன்களில் (43 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். தொடர்ந்து இறங்கிய ஸ்டீவன் சுமித்தும் (38 ரன்) கணிசமான பங்களிப்பை அளித்து நெருக்கடியை தணித்தார்.

    ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திரிபாதி 34 ரன்களுடனும் (23 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். 4-வது ஆட்டத்தில் ஆடிய ராஜஸ்தான் அணிக்கு இது முதல் வெற்றியாகும். இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத பெங்களூரு அணிக்கு இது 4-வது தோல்வியாகும்.

      #IPL2019 #RRvRCB
    Next Story
    ×