search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    சென்னை சூப்பர் கிங்ஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றி - இம்ரான் தாகீருக்கு டோனி பாராட்டு
    X

    சென்னை சூப்பர் கிங்ஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றி - இம்ரான் தாகீருக்கு டோனி பாராட்டு

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் இம்ரான் தாகீர் சிறப்பாக பந்து வீசியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி பாராட்டி உள்ளார். #IPL2019 #ImranTahir #MSDhoni
    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி ‘ஹாட்ரிக்‘ வெற்றி பெற்றது.

    சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன் குவித்தது.

    டோனி 46 பந்தில் 75 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்) ரெய்னா 32 பந்தில் 36 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர், பிராவோ 16 பந்தில் 27 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஆர்ச்சர் 2 விக்கெட்டும், குல்கர்னி, பென்ஸ்டோக்ஸ், ஜெயதேவ் உனட்கட், தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன்னில் வெற்றி பெற்று பென் ஸ்டோக்ஸ் 26 பந்தில் 46 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்), திரிபாதி 24 பந்தில் 39 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), ஆர்ச்சர் 11 பந்தில் 24 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். இம்ரான் தாகீர், தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர், பிராவோ தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் ‘ஹாட்ரிக்‘ வெற்றியை பதிவு செய்தது. ஏற்கனவே பெங்களூர், டெல்லி அணிகளை வீழ்த்தி இருந்தது.

    வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியாவது:-

    நாங்கள் பாட்னர்ஷிப் அமைத்து ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். அந்த நேரத்தில் அணிக்கு அது தேவையாக இருந்தது. ஏனென்றால் பனி பொழிவு இருக்கும் என்பதை நாங்கள் அறிந்து இருந்தோம்.

    கை விரல்களை பயன்படுத்தி பந்து வீசும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் (சுழற்பந்து வீரர்கள்) பனி பொழிவு நேரத்தில் பந்து வீசுவது கடினம். ஆனால் லெக்ஸ்பின்னரான இம்ரான் தாகீர் சிறப்பாக பந்து வீசினார். பனி பொழிவு நேரத்தில் ரிஸ்ட் ஸ்பின்னராக அவர் சிறப்பாக செயல்பட்டார். இம்ரான் தாகீர் உண்மையிலேயே அபாரமாக வீசினார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வலது கை பேட்ஸ்மேன் குறைவாக இருந்ததால் ஹர்பஜன்சிங் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை.

    ஐ.பி.எல். நீண்ட நாள் தொடர் என்பதால் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் தங்களது ஆட்டத்தை மேம்படுத்தி கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் ஹாட்ரிக் தோல்வியை தழுவியது.

    இந்த தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ரகானே கூறும் போது எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. நாங்கள் சிறப்பாக விளையாடியும் எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றார்.

    சென்னை அணி 4-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் உடன் 3-ந்தேதி மோதுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெங்களூரை நாளை சந்திக்கிறது. #IPL2019 #ImranTahir #MSDhoni
    Next Story
    ×