search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது வெற்றி - பந்து வீச்சாளர்களுக்கு டோனி பாராட்டு
    X

    சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது வெற்றி - பந்து வீச்சாளர்களுக்கு டோனி பாராட்டு

    டெல்லி அணியுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டை தெரிவித்துள்ளார். #IPL2019 #CSKvDC
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லியை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

    டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது.

    தவான் 47 பந்தில் 51 ரன்னும் (7 பவுண்டரி), ரி‌ஷப் பந்த் 13 பந்தில் 25 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பிராவோ 3 விக்கெட் வீழ்த்தினார். தீபக் சாஹர், ஜடேஜா, இம்ரான் தாகீர் ஆகியோருக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.

    பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் 148 ரன் இலக்கை எடுத்தது. சென்னை அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வாட்சன் 26 பந்தில் 44 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்), டோனி 32 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), ரெய்னா 16 பந்தில் 30 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும், இஷாந்த் சர்மா, ரபடா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி இருந்தது டெல்லி அணி முதல் தோல்வியை சந்தித்தது.

    இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-

    இந்த ஆடுகளத்தில் பந்து எதிர்பார்த்ததை விட அதிகமாக திரும்பியது. மேலும் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்வதற்கு ஏற்ற வகையில் பனித்துளி போதுமான அளவுக்கு இருந்தது.

    பந்து வீச்சாளர்கள் பணி பாராட்டுக்குரியது. டெல்லியை 147 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீரர் நிகிடி இல்லாதது எங்களுக்கு மிகப் பெரிய இழப்பே.

    பீல்டிங்கில் நாங்கள் ஒரு போதும் சிறந்து விளங்கவில்லை. ஆனால் மோசமாக இல்லாமல் பாதுகாப்பான பீல்டிங் இருக்கிறது. சில ரன்களை இழந்தாலும் நாங்கள் அனுபவத்தின் மூலம் அதை சரி செய்கிறோம். பீல்டிங்கில் இருக்கும் குறையை நாங்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மூலம் நிவர்த்தி செய்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் ஷிரேயாஸ் அய்யர் கூறும் போது இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது கடினம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். இதற்காக பேட்டிங்கை குறை கூற மாட்டேன் என்றார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 31-ந்தேதி சேப்பாக்கத்தில் சந்திக்கிறது. டெல்லி அணி கொல்கத்தாவை 30-ந்தேதி எதிர்கொள்கிறது. #DCvsCSK
    Next Story
    ×